மதுரை மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் தமிழகத்திற்கு தி.மு.க. செய்த துரோகங்களை பட்டியலிட்டுப் பேசினார் எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா!

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்தாலும், காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கிறது கர்நாடக அரசு. இதனை கூட்டணியில் இருக்கும் தி.மு.க. தட்டிக் கேட்காமல், தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கிறது.

தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சியும், தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டு காவிரி விவகாரத்தில் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. எனவே, தமிழகத்தைப் பொறுத்தளவில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஒரு மக்களவைத் தொகுதிகளில் கூட வெற்றி பெறக்கூடாது என ஆவேசமாக பேசினார் ராஜன் செல்லப்பா!

மதுரை ஆட்சியல் அலுவலகத்தில் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்த அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘‘கடந்த பத்து ஆண்டுகளில் மதுரைக்கு அ.தி.மு.க. செய்த நலத்திட்டங்களை மக்களிடத்தில் எடுத்துரைத்து வாக்குகளை கேட்போம்.

குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.8 ஆயிரம் கோடிக்கான நலத்திட்டங்கள் மதுரையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும் அ.தி.மு.க. அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டிருக்கிறது’’ என்றவர், சிட்டிங் எம்.பி.யாகவும், மீண்டும் வேட்பாளராக களமிறங்கும் சு.வெங்கடேசனையும் ஒரு பிடிபிடித்தார்.

அதாவது, ‘‘தற்போதை மக்களவை எம்.பி.யாக இருக்கும் சு.வெங்கடேசன் மக்களை சந்திப்பதே கிடையாது. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. எனவே, மதுரையைப் பொறுத்தளவில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதியாகிவிட்டது’’ என்றார்.

மதுரையில் வெல்லப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal