இரட்டை இலை சின்னத்தை முடக்கும் பட்சத்தில் தங்களுக்கு வாளி சின்னம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே ஏற்பட்ட உச்சக்கட்ட மோதலை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனையடுத்து அதிமுகவை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற முடிவில் ஓபிஎஸ் நடத்தி வரும் சட்டப்போராட்டங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஓபிஎஸ்-க்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நடத்தி வரும் சட்ட போராட்டத்தை தொடர வேண்டும் என்றால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டால் தான் சரியாக இருக்கும் என்பதால் ஓபிஎஸ் தாமரை சின்னத்தில் நிற்காமல் சுயேட்சை சின்னத்தை தேர்வு செய்து போட்டியிடுகிறார்.

இந்நிலையில், இரட்டை இலை சின்னத்துக்காக நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் ஓபிஎஸ் அணுகி வருகிறார். ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு இரட்டை இலை சின்னம் கோரி ஆணையத்தை அணுக ஓபிஎஸ் தரப்புக்கு தடையில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

ஆகையால் ஓபிஎஸ் தரப்பில் அவரது ஆததரவாளர் புகழேந்தி தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது. தனது தரப்புக்கு ஒதுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும். அப்படி முடக்கும் பட்சத்தில் பக்கெட் சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal