தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ச.முரசொலி அறிமுகக் கூட்டம் மற்றும் இண்டியா கூட்டணிக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் ஒரத்தநாட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: “தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலி, தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கட்சியினரும், கூட்டணிக் கட்சியினரும் களப் பணியாற்ற வேண்டும்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசு மகளிருக்கு வழங்கும் உரிமைத் தொகையை மத்திய அரசு வழங்கி வருவதாகவும், எப்போது வேண்டுமானாலும் நிறுத்திவிடலாம் எனவும் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுத் தரும் திமுக மாவட்டச் செயலாளருக்கு, எனது சொந்த செலவில் 6 பவுன் சங்கிலி பரிசாக வழங்கப்படும்” என்றார்.

கூட்டத்தில் தஞ்சாவூர் எம்.பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், அண்ணாதுரை, அசோக்குமார், டிகேஜி.நீலமேகம், முன்னாள் எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal