மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படுவதில் அளவுக்கு மிஞ்சிய தாமதம் ஏற்பட்டுள்ளதால், எதிர்க்கட்சியினரின் கேலிக்குள்ளாகியிருக்கிறது காங்கிரஸ் கட்சி.
கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் திமுக போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், தற்போது இண்டியா கூட்டணியில் இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தொடக்கத்திலேயே புதுச்சேரிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டார். தொடர்ந்து தமிழகத்தில் மயிலாடுதுறை, திருநெல்வேலி தொகுதிகள் தவிர்த்து, மற்ற 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் கடந்த 23-ம் தேதி இரவு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் நேற்று(மார்ச் 25) மதியம் திருநெல்வேலி தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பாட்டார். ஆனாலும் இன்று (மார்ச் 26) வரை மயிலாடுதுறை தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படவில்லை.
கடந்த முறை திமுக வசம் இருந்த மயிலாடுதுறை தொகுதியை, வலியுறுத்தி கேட்டுப் பெற்ற காங்கிரஸ் கட்சி, வேட்பாளரை அறிவிக்க முடியாமல் திணறுவதாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தோர் விமர்சித்தும், கேலி செய்தும் வருகின்றனர். வேட்பு மனு தாக்கல் நாளையுடன்(மார்ச் 27) நிறைவடையும் நிலையில், காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை அறிவிக்காததால் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும்கூட தொண்டர்களுக்கும், வாக்காளர்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் தர்ம சங்கடத்தில் தவித்து வருகின்றனர்.
இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதற்கு முன்னதாகவே, அக்கட்சியின் அகில இந்திய பொறுப்பில் உள்ள ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக கூறப்படும் பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் இத்தொகுதியின் முன்னாள் எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் ஆகிய இருவரும் மயிலாடுதுறை தொகுதியை குறிவைத்து பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தனர்.
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டப் பின்னர், பிரவீன் சக்கரவர்த்திதான் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளதாக பரவலாக காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலேயே பேச்சு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக காங்கிரஸ் கட்சியின் தற்போதைய கிருஷ்ணகிரி எம்.பி.யான ஏ.செல்லக்குமார், மயிலாடுதுறை தொகுதியை கேட்டு வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே காங்கிரஸ் வசமிருந்த திருச்சி தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு கொடுத்து விட்டு, மயிலாடுதுறையை காங்கிரஸ் கட்சிக்கு பெற்ற நிலையில், அத்தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கூறி தற்போதைய திருச்சி எம்.பியான சு.திருநாவுக்கரசர் அழுத்தம் தந்து வருவதாகவும் சொல்கின்றனர்.
மணிசங்கர் அய்யர், திருநாவுக்கரசர், செல்லக்குமார், பிரவீன் சக்கரவர்த்தி என மேலிடத்துக்கு நெருக்கமான நபர்கள் கட்சியின் அகில இந்திய தலைமைக்கு தொடர்ந்து அழுத்தம் தந்து வருவதால், விரைந்து முடிவெடுக்க முடியாமல் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது.