நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடும் நிலையில், திமுக மற்றும் மதிமுக நிர்வாகிகள் மத்தியில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால் தேர்தல் பணியில் திமுகவினர் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் 40க்கும் 40 இடங்களை கைப்பற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி எடுத்துள்ளார். இதற்காக கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டு கூட்டணி கட்சியினர் வெற்றிக்கு உழைத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆனால் திருச்சி தொகுதியில் திமுக- மதிமுக இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை தங்களது சின்னமான பம்பரம் அல்லது சுயேட்சை சின்னத்தில் போட்டிடுவோம் என அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன் தினம் திருச்சி மக்களவை தொகுதிக்கான வேட்பாளர் அறிமுகம் கூட்டத்தின் போது திமுக- மதிமுக இடையே மோதல் ஏற்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகிவுள்ளது. துரை வைகோவிடம் திமுக நிர்வாகிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருக்கும் என கூறி வருகின்றனர். ஆனால் தங்களது சின்னத்தில் தான் போட்டியிடுவோம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என உறுதியாக தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியில்லையென துரை வைகோ கூறினார். இதனால் மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் அதிருப்தி அடைந்தனர்.
அப்போது கூட்டத்தில் அமர்ந்திருந்த திமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் துரை வைகோவிற்கு தேர்தல் பணியாற்ற மாட்டோம் என உறுதியாக கூறிவிட்டனர். இதனையடுத்து நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய துரை வைகோ வந்த போது திருச்சி பகுதி அமைச்சர்களான கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் வரவில்லை. மேலும் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் திமுகவினரும் கலந்து கொள்ளவில்லை. திருச்சி திமுகவினர் துரை வைகோ மீது அதிருப்தியில் இருப்பதால் தேர்தல் பணியாற்றவில்லையென கூறப்படுகிறது.
இந்தநிலையில், வேட்புமனு தாக்கலுக்கு அமைச்சர்கள் வராதது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த துரை வைகோ, மனு தாக்கல் செய்ய வருவதற்கு முன்னர் அமைச்சர் கே.என்.நேருவை பார்த்துவிட்டுதான் வந்தேன். அவர் வீட்டுக்கு சென்றேன். என்னை மகன் போல நடத்தினார். என்னை வாசல் வரை வந்து வழி அனுப்பிவிட்டு சென்றார். என்னை அவர் தனது மகனாக பாவித்து அவர் நடத்துகிறார். அப்படி இருக்க எங்களுக்குள் என்ன பிரச்சனை இருக்க முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.அந்த தொகுதிக்கு தேர்தல் பணிகளை மேற்கொள்ள திருச்சியில் இருந்து திமுகவினர் சென்றுவிட்டதால் தேர்தல் பணி மந்தமாகவை காணப்படுகிறது. எனவே திமுக-மதிமுக இடையே சமரசம் வரும் நாட்களில் ஏற்படுமா.? அல்லது மோதல் போக்கு தொடர்ந்து நீடிக்குமா என்பது தெரியவரும். துரை வைகோவிற்கு ஆதரவாக திமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாதது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வருத்தம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினிடம் வைகோ முறையிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.