பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக புதுச்சேரி தி.மு.க. நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:- “என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா ஆட்சியில் புதுச்சேரி மாநில மக்கள் அவதிபடுகின்றனர். சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கஞ்சா பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். நிலம், வீடு அபகரிப்பு நடக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மத்தியில் பா.ஜனதா ஆட்சி, மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தால் பாலாரும், தேனாறும் ஓடும் என்று வாக்குறுதி கொடுத்தார்.

ஆனால் அவரால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவில்லை. அவர்களின் தேர்தல் அறிக்கையை எடுத்து பார்த்தால், 5 சதவீதம கூட நிறைவேற்றவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் ரெஸ்டோ பார்களை திறந்து மதுகுடிக்கும் மாநிலமாக மாற்றிவிட்டனர். கஞ்சா மாநிலமாக ஆக்கி விட்டனர். இவர்கள் ஆட்சியில் நீடித்தால் புதுச்சேரியின் வளர்ச்சி மட்டுமின்றி, இளைஞர் சமுதாயம் வீணாகிவிடும். அதற்கு முன்னோட்டமாக இந்த மக்களவை தேர்தல் இருக்கிறது.

இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இருந்து வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். நாம் தொகுதிகளில் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். கருத்து வேறுபாடுகளை களைந்து இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். வேட்பாளரை கண்டுபிடிக்க முடியாமல் 4 மாதங்களாக தடுமாறிக் கொண்டிருக்கின்ற என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்”. இவ்வாறு அவர் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal