பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தரப்பில் 3-ல் இருந்து 4 தொகுதிகள் கேட்ட நிலையில் இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என பாஜக தெரிவித்ததால் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என தகவல் வெளியானது.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன் கூறியதாவது:- நாங்கள் கேட்ட 2 தொகுதிகளை பா.ஜ.க. வழங்கியுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை பாஜக தலைமை அறிவிக்கும்.
.எண்ணிக்கை முக்கியமல்ல, கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம் என்றார். இதனிடையே, 2 தொகுதிகளில் ஒன்றில் போட்டியா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நான் தேனியில் போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என சூசகமாக பதில் அளித்தார். முன்னதாக, பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 24-ந்தேதி முதல் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்ய உள்ளார். வருகிற 24-ந்தேதி அன்று தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.