மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 20) தொடங்கியது. அரசியல் கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு ஆகியவை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. சில அரசியல் கட்சிகள் மனு தாக்கலுடன் பிரச்சாரத்தையும் தொடங்கி விடும். தமிழ்நாட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில், முதல் கட்டமாக ஏப்.19-ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதனால் அரசியல் கட்சிகள் மனு தாக்கலுடன் தீவிர பிரச்சாரத்தை தொடங்கிவிடுவார்கள். இன்னும் மூன்றரை வாரங்களே இருப்பதால் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தக் கூடும். இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் விவரங்களை, சம்பந்தப்பட்ட கட்சியினர் ஆன்லைனில் தான் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறும்போது, ‘‘தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்கான வாகன அனுமதியை பல்வேறு கட்சிகளும் அணுகக்கூடும். இது ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. பிரச்சார வாகனத்தின் வண்ண புகைப்படம், பதிவுச் சான்றிதழ், வாகனக் காப்பீடு மற்றும் வாகனத்தின் தற்காலிக புகை அளவு சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.

இவை இல்லாதபோது, அந்த வாகனங்கள் பிரச்சாரத்துக்கு அனுமதிக்கப் படாது. பொதுவாகவே அனைவரும் பதிவுச் சான்றிதழ் வைத்திருப்பார்கள். ஆனால் காப்பீடு, தற்காலிக புகை அளவு சான்றிதழ் உள்ளிட்டவை இருக்காது. அப்படிப்பட்ட வாகனங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் அனுமதி கிடையாது. கடைசி நேரத்தில் பலரும் எங்கள் வாகனங்களுக்கு, பிரச்சாரத்தில் அனுமதி தரப்படவில்லை என்பதற்கான காரணங்களில், மேற்கண்ட ஏதேனும் ஒரு காரணம் இருக்கக்கூடும்” என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal