பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக திருப்பூரில் போட்டியிடும் சுப்பராயன், நாகையில் போட்டியிடும் வை.செல்வராஜ் ஆகியோர் அண்ணா அறிவாலயம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் உடனிருந்தார். அதேபோல் ம.தி.மு.க. சார்பில் திருச்சியில் போட்டியிடும் துரை வைகோவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உடனிருந்தார்.

பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- ‘தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட இயக்கத்துக்கு ஒரு கோட்டையாக அண்ணா காலத்தில் இருந்தே திகழ்ந்து வந்த திருச்சியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கி தந்துள்ளார். பிரதமர் மோடி 5 தடவை என்ன 50 தடவைகள் இங்கு வந்தாலும் தமிழகத்தை திராவிட பிடியில் இருந்து விடுவிக்க முடியாது. அவர் எதையோ நினைத்துக் கொண்டு எதையோ பேசுகிறார். மோடியின் கனவு பலிக்காது. இந்த தேர்தலில் 40-க்கு 40 வெற்றி கொடி நாட்டியது இந்தியா கூட்டணி என்ற செய்தியை மக்கள் பார்க்கத் தான் போகிறார்கள்’. இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:- ‘விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விளக்கமாக தெரிவித்து உள்ளது. அது எல்லா கட்சி களுக்கும் பொதுவானது. இதை யாரும் மீறக்கூடாது. ஆனால் நாட்டின் பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறுகிற வகையில் தொடர்ந்து அவர் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். பிரதமர் மோடி கோவையில் ரோடு ஷோ என்கிற பெயரில் பெரிய ஆர்ப்பாட்டத்தோடு பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மோடி எதிர்பார்த்தபடி பொதுமக்கள் வரவில்லை. அதற்கு மாறாக பள்ளி குழந்தைகளை கொண்டு வந்து தெருவில் நிறுத்தி வரவேற்பு கொடுத்ததை போல் செய்திருக்கிறார்கள். இது அப்பட்டமான விதி மீறல் ஆகும். இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிப்போம். தமிழகம்-புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் மகத்தான வெற்றி பெறும்’. இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal