பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் பேசுவார் என்று அழைப்பு விடுத்தார் பாஜக துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம். கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம் பத்தாண்டு காலம் பிரதமர் மோடியின் சாதனைகளை பட்டியலிட்டார்.

சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிரதமர் மோடியும் தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். பொதுக்கூட்ட மேடைக்கு வந்த பிரதமர் மோடி கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசினார். டாக்டர் ராமதாஸின் கைகளை பிடித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி. அப்போது மீண்டும் மோடி வேண்டும் மோடி என்று உற்சாக குரல் எழுப்பினர்.

ஓ. பன்னீர் செல்வத்தின் கைகளை பிடித்து சிரித்து நலம் விசாரித்து பேசினார் பிரதமர் மோடி. கூட்டணி கட்சித்தலைவர்கள் அனைவரும் சால்வை அணிவித்தனர். பிரதமர் மோடி வருவதற்கு முன்பு கூட்டணி கட்சித்தலைவர்கள் அனைவரும் சில நிமிடங்கள் மட்டுமே பேசி முடித்தனர். அன்புமணி ராமதாஸ் பேசிய பின்னர் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசுவார் என அழைப்பு விடுத்தார் கே.பி. ராமலிங்கம். அப்போது சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசிய ஓ.பன்னீர் செல்வம், பத்தாண்டு காலமாக பிரதமர் மோடியின் சாதனைகளைப் பட்டியலிட்டார். ஒரே கையெழுத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு அரசாணை பிறப்பித்தவர் என்று கூறினார் ஓ.பன்னீர்செல்வம். பிரதமர் மோடிக்கு சேலம் பொதுக்கூட்ட மேடையில் ஜவ்வரிசி, அர்த்தநாரீஸ்வரர் சிலை போன்றவை நினைவு பரிசளிக்கப்பட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal