மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இத்னால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் ஆர்வக் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக மதுரை மாநகர மாவட்ட கழகத்தின் சார்பில், வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, செல்வம், அதிமுக மாநில மருத்துவர் அணி இணை செயளாலர் மருத்துவர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசுகையில் ‘‘அதிமுகவின் தலைவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வழியில் அவரது தொண்டர்கள் செயல்படுகிறார்கள். அதிமுக மாநாட்டில் புளியோதரை சாப்பிட்டுவிட்டு தொண்டர்கள் எழுச்சியாக பங்கேற்றார்கள். ஆனால், திமுக மாநாட்டில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு திமுக தொண்டர்கள் சீட்டு விளையாடினார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பேசுகையில், அங்கிருந்த அனைவரும் சென்றதால் நாற்காலிகள் காலியாக இருந்தது.

மத்திய, மாநில அரசின் தவறான நடவடிக்கையால் விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு குஜராத் மற்றும் தமிழ்நாடு முக்கிய தளமாக விளங்குகிறது. போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், மக்கள் தலைவராக விளங்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமியை, அண்ணாமலை தவறாக விமர்சனம் செய்கிறார்.

திமுக ஆட்சி அமைத்த 5 ஆண்டுகளில், கடந்த 6 மாதங்களில் மட்டும் தான், மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் மக்கள் மத்தியில் வலம் வருகிறார. இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுக்கு அடிமையாக செயல்படுகிறது. மக்களுக்கு உண்மையாக செயல்படக்கூடிய தொண்டர்கள் அல்லாத கட்சிகளாக காங்கிரஸ் மற்றும் இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது’’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘‘திமுக ஆட்சியில் ஒரு சொட்டு மதுபானம் அல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது தமிழ்நாடு போதைப்பொருள் மாநிலமாக விளங்குகிறது. இதுகுறித்து கனிமொழி எம்பியிடம் மக்கள் கேட்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியிலிருந்து, வெளியில் வந்ததால் அதிமுக தற்போது கிளர்ந்து எழுந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை நிறுத்திவிட்டனர். வரிசுமையை ஏற்றிவிட்டு ரூ.1000 வழங்குவதை பெறுமையாக நினைக்கின்றனர். ஒரு பவுன் தங்கம், படித்து பட்டம் பெற்ற பெண்களுக்கு ரூ. 50 ஆயிரம், மாணவர்களுக்கு மிதிவண்டி கொடுத்தோம். தற்போது இவற்றையெல்லாம் நிறுத்திவிட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான 100 வாக்குறுதிகளை திமுக அளித்தது.

மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை தடுப்பதற்கு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள் என்று கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பம் மட்டுமே உலகத்தில் ஆட்சியை நடத்தி வருகிறது. ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் செய்திருப்பதை அவர்களே ஒத்துக் கொண்டுள்ளார்கள். அதிமுகவின் கோட்டை மதுரை என்பதற்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை உறுதி செய்வோம்’’ இவ்வாறு கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமியை, அண்ணாமலை விமர்சித்ததற்கு, தமிழ்நாட்டில் உள்ள ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான் என செல்லூர் ராஜூ கடுமையாக அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal