பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் குறித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் மு.பரஞ்சோதி தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்து.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘அடுத்து எடப்பாடியார் ஆட்சி அமையும் போது (2026) இங்கிருக்கும் அனைத்து நிர்வாகிகளும் அதே பதவியில் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். எனவே, தேர்தல் பணிகளை தொய்வில்லாமல் பார்க்கவேண்டும்’ என அ.தி.மு.க.வின் நிர்வாகிகளுக்கு மறைமுக எச்சரிக்கையை விடுத்திருக்கிறார் பரஞ்ஜோதி!

அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு எதற்காக மாவட்டச் செயலாளர் மு.பரஞ்சோதி எச்சரிக்கை விடுக்கவேண்டும் என்பது தொடர்பாக அக்கூட்டத்தில் கலந்துகொண்ட சிலரிடம் பேசினோம்.

‘‘சார், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் வேறு வேட்பாளர் நின்றாலே, அரசியல் களத்தில் இறங்கி வேலை பார்த்து வெற்றி பெற வைப்பவர் கேன்.என்.நேரு. ஆனால், அவரது மகன் அருண் நேருவே இந்தமுறை போட்டியிடுவதால், சொல்லவா வேண்டும். இப்போதே ‘நாளைய பாராளுமன்றமே..!’ என்ற வாசகத்துடன் உடன் பிறப்புக்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், அ.தி.மு.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு தி.மு.க. தரப்பில் ‘கவணிப்பு’ காத்திருப்பதாக பரஞ்சோதிக்கு தகவல் சென்றிருக்கிறது. எனவே, அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரும் ‘விலை’ போய்விடக் கூடாது. அப்படி போனால், எடப்பாடியாரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால்தான், ‘அடுத்து எடப்பாடியாரின் ஆட்சியில் நீங்கள் இதே பதவியில் இருக்கவேண்டும்’ என பேசியிருக்கிறார். அதாவது, ‘வேறுவிதமாக’ நடந்தால், ‘பதவி பறிக்கப்படும்’ என்பதைத்தான் மாவட்டச் செயலாளர் சூசகமாக சொல்லியிருக்கிறார்’’ என்றனர்.

அதிகாரப் பூர்வமாக இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையிலேயே, பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் ஜூரம் அடிக்க ஆரம்பித்துவிட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal