பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ள நிலையில், பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிரமானம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் ரவி மறுத்திருப்பதையடுத்து உச்சநீதிமன்றத்தை நாட திமுக தரப்பு களம் இறங்கியுள்ளது.

தமிழகத்தில் ஆளுநர் ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. நீட் மசோதா, ஆன்லைன் சூதாட்ட மசோதா, சிறை கைதிகள் விடுதலை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை கிடப்பில் போட்டது. இதற்கு எதிராக திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், ஆளுநரின் செயல்பாட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றமும் கருத்து தெரிவித்தது. இதன் காரணமாக தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இருந்த போதும் அரசு விழாவில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பேசுவது, திமுக அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது என தமிழக அரசுக்கு எதிராக மோதல் போக்கை ஆளுநர் மேற்கொண்டு வருகிறார்.

இந்த சூழ்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை விதிக்கப்பட்டதால் எம்எல்ஏ பதவியிலை இழந்தார். இதன் காரணமாக அமைச்சர் பதவியையும் இழக்க நேரிட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பொன்முடி குற்றவாளி என்று அளிக்கப்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அவருக்கு வழங்கப்பட்ட மூன்று ஆண்டு தண்டனை இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தண்டனையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரினர். அதற்கு பதலளித்த நீதிபதிகள், தற்போது வழங்கப்பட்ட உத்தரவில் அதுபோன்று குறிப்பிட முடியாது என தெரவித்திருந்தனர்.

இதனையடுத்து திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு திரும்ப பெறப்பட்டதையடுத்து மீண்டும் பொன்முடி எம்எல்ஏவானர், நீதிம்ன்றம் மற்றும் சட்டப்பேரவை உத்தரவை இணைத்து ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில் பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமானம் செய்து வைக்க கோரினார். ஆனால் இதற்கு ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்து விட்டார்.

நீதிமன்றம் தண்டனை மட்டுமே நிறுத்தி வைத்துள்ளது. குற்றவாளி இல்லையென அறிவிக்கவில்லை எனவே அமைச்சராக பதவி பிரமானம் செய்து வைக்க முடியாது என கூறிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆலோசனை நடத்தியுள்ளது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெறப்பட்டு உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக முறையிடவுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal