நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. நாளை மற்றும் நாளை மறுநாள் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக இருக்கிறது
இந்த நிலையில்தான் பெரம்பலூர் தொகுதியைப் பொறுத்தளவில் ‘ஸ்டார்’ ஆந்தஸ்தை பெற்றிருக்கிறது. காரணம், தி.மு.க.வின் மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு, அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் வனத்துறை அமைச்சர் என்.செல்வராஜின் சகோதரர் மகன் என்.டி.சந்திரமோகன், பா.ஜ.க. கூட்டணியில் சிட்டிங் எம்.பி.யான ‘பாரி’வேந்தர் ஆகியோர் போட்டியிருகின்றனர்.
பெரம்பலூர் தொகுதியைப் பொறுத்தளவில் ‘எங்கள் சின்னவர் வெற்றி பெறுவது உறுதி?’ என அடித்துக் கூறுகின்றனர் தி.மு.க.வினர். பெரம்பலூர் தொகுதி நிலவரம் குறித்து நடுநிலையானவர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், பெரம்பலூர் தொகுதியில் சின்னவர் (அருண் நேரு) போட்டியிடுவதால் தி.மு.க.வினர் உற்சாகத்தில் இருக்கின்றனர். காரணம், ஆறுபோல ‘விட்டமின்’ பாயும்!
கடந்த சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, உப்பிலியபுரம், பச்சைமலை என பல்வேறு பகுதிகளுக்கு அடிக்கடி சென்றுவந்தார் அருண் நேரு. அப்போதே அவர் இந்தத் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில்தான் விருப்பமனுக் கூட அவரை எதிர்த்து யாரும் தாக்கல் செய்யவில்லை.
தி.மு.க.வைப் பொறுத்தளவில் பலம் ஒன்றே ஒன்றுதான். அருண் நேருவின் தந்தை சீனியர் அமைச்சர், திருச்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக்கூடியவர். தனது மகனின் வெற்றிக்காக ‘இறங்கி’ வேலை பார்க்கக்கூடியவர்! மற்றபடி வேறொன்றும் இல்லை. அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் தொட்டு பெரம்பலூர் தொகுதி முத்தரையருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், தி.மு.க.வில் முத்தரையருக்கு கொடுக்கப்படுவதில்லை. அப்படியே கொடுத்தாலும், அப்போது அந்த வேட்பாளரால் வெற்றி பெற முடியாது. வெற்றி வாய்ப்பு இருக்கும் போது, பெரம்பலூர் தொகுதியை ஒரு முத்தரையருக்கு கொடுக்க மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது.
எனவே, பல்வேறு நெகடிவ் விஷயங்கள் இருந்தாலும், அருண் நேருவின் வெற்றிக்கு தி.மு.க.வினர் பாடுபட தயாராகிவிட்டார்கள். ‘விட்டமின்களும்’ சரளமாக பாயும். எனவே, அருண் நேருவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று’’ என்றனர்.
அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது பற்றி சிலரிடம் பேசினோம். ‘‘சார், மறைந்த முன்னாள் வனத்துறை அமைச்சர் என்.செல்வராஜின் சகோதரர் மகன் என்.டி.சந்திரமோகன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. மறைந்த செல்வராஜ் அமைச்சராக இருந்தபோது, முத்தரையர் சமுதாயத்தைத் தாண்டி அனைவருக்கும் ஏராளமான உதவிகளைச் செய்தார். பெரும்பான்மையான முத்தரையர் சமுதாய மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
பெரம்பலூர் தொகுதியைப் பொறுத்தளவில் 75 சதவீத மக்கள் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக்கூடியவர்களும் அவர்கள்தான். அரசியலில் அப்பழுக்கற்றவர் என்ற பெயரை எடுத்தவர் என்.செல்வராஜ். வேட்பாளராக களமிறங்கும் என்.டி.சந்திரமோகனும் ‘சாஃப்டான கேரக்டர்தான். இவர்களிடம் தாராளமாக செலவு செய்ய ‘விட்டமின்’ அவ்வளவாக இல்லை என்றாலும், அப்பகுதி மக்களின் மனதில் இருக்கிறார்கள். எனவே, பணபலத்தை எல்லாம் தாண்டி, சமுதாய வாக்குகளே என்.டி.சந்திரமோகனை கரை சேர்ப்பது உறுதி’’ என்றனர்.
பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிட்டிங் எம்.பி.யாக இருக்கக்கூடிய பச்சமுத்து. இவர் கடந்த நான்கு ஆண்டுகளில் தனது கல்லூரியில் ஏழை எளியவர்களுக்கு இலவசமாக சீட் கொடுக்கப்படும் என கடந்த தேர்தலில் அறிவித்ததை தொடர்ந்து நடைமுறைப் படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி அமைச்சர் கே.என்.நேருவுக்கு இணையாக விட்டமினை இறக்கக்கூடியவர் என்பதால், களத்தில் இவரும் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறார்.
ஆக, மொத்தத்தில் பெரம்பலூர் தொகுதியைப் பொறுத்தளவில் சன(சமுதாயமா)நாயகமா? பண நாயகமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்..!