வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துவிட்டது தி.மு.க.! அ.தி.மு.க. இன்னும் திணறிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் லிஸ்ட் உதயநிதி கையில் இருக்கிறதாம். இதில் இளைஞரணியில் இருந்து 6 புதுமுகங்களை அறிமுகப்படுத்த இருக்கிறாராம் உதயநிதி ஸ்டாலின்.

இது பற்றி உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், கடந்த சில மாதங்களாகவே கட்சியில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளில் எல்லாம் உதயநிதி ஸ்டாலினின் தலையீடு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் எடுக்க கூடிய முடிவுகளுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. கட்சியின் அடுத்த அதிகார புள்ளியாகவும் உதயநிதி பார்க்கப்படுகிறார்.

2024 லோக்சபா தேர்தலுக்கு திமுக தயாராகி வரும் நிலையில்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுகவில் போட்டியிட உள்ள எம்பிக்கள் வேட்பாளர்கள் லிஸ்டை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார். முன்னதாக கட்சியில் மாவட்ட செயலாளர்கள் பலரை தேர்வு செய்வதில் உதயநிதி பங்கு இருந்தது. ஆனாலும் சீனியர்கள் பலர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் உதயநிதியின் முழுமையான லிஸ்ட் அப்போது பயன்படுத்தப்படவில்லை. பல சீனியர்களுக்கு மீண்டும் மாவட்ட செயலாளர்கள் பதவி வழங்கப்பட்டது. இதனால் உதயநிதிக்கு நெருக்கமான சில இளைஞரணி நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர்கள் பதவி வழங்க முடியாமல் போனது.

இந்த நிலையில்தான் இந்த லோக்சபா தேர்தலில் இளைஞரணி நிர்வாகிகளை களமிறக்க உதயநிதி முடிவு செய்துள்ளார். 40 தொகுதிகளில் திமுக எப்படியும் 25 தொகுதிகளில் போட்டியிடும். அதில் 6- முதல் 8 தொகுதிகளில் இளைஞரணி வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற திட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறரர்.

அதாவது 25 இடங்களில் 12- 13 இடங்களை ஏற்கனவே எம்பியாக இருக்கும் சீனியர்களுக்கு கொடுக்கலாம். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாம். ஆனால் 6 முதல் 8 இடங்களை எப்படியாவது புதியவர்கள்தான் பெற வேண்டும். அதாவது இளைஞர்கள்தான் பெற வேண்டும் என்ற திட்டத்தில் உதயநிதி இருக்கிறாராம். குறைந்தது 6 பேர் இளைஞரணி பிரிவில் இருந்து வர வேண்டும் என்று உதயநிதி தீவிரமாக முயற்சிகளை செய்து வருகிறாரர்.

இதற்காக வாரிசுகள் இல்லாத, 6 புது முகங்களை தேர்வு செய்துவிட்டாராம். இந்த 6 புதுமுகங்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களை தேர்தலில் நிற்க வைக்க வேண்டும் என்பதில் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்’’ என்றனர்.

தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal