மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தேமுதிக இன்று அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதிமுக – தேமுதிக இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தலைவர்கள் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லம் தேடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அரைமணிநேரம் வரை இந்த சந்திப்பு நடந்தது. ஆனால் இதில் பேசப்பட்ட விஷயங்கள் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

தேமுதிக, அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோல் பிரேமலதாவும் அதிமுக கூட்டணியில் இணைய சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதுபற்றிய விபரம் எதுவும் வெளியாகவில்லை. ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. தேமுதிக-அதிமுக தலைவர்கள் இடையேயான சந்திப்பு என்பது மொத்தம் அரை மணிநேரம் வரை நடந்துள்ளது.

லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில்தான் பாஜக மூன்றாவது அணியை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் உருவாக்கும் முயற்சியில் உள்ளது. அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது இந்த கூட்டணியில் பாமக, தேமுதிக சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வந்தன. ஆனால் இது எதுவும் பலன் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பாமக மட்டும் பாஜக கூட்டணிக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

பாஜகவுடன் கூட்டணி சேராத பட்சத்தில் 2024 லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக ஆலோசனை செய்து வருகிறதாம். அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. மொத்தமாக 7 தொகுதிகள் கேட்ட தேமுதிகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க அதிமுக. திட்டமிட்டுள்ளதாம்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal