வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை தொகுதியில் சு.வெங்கடேசனும், திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தமும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரையின் சிட்டிங் எம்.பி.யாக இருப்பவர் சு.வெங்கடேசன். மீண்டும் களமிறங்க கட்சி மேலிடம் இவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, ‘எம்.பி.யை காணவில்லை… கண்டா வரச்சொல்லுங்க…!’ என மதுரை முழுவதும் போஸ்டர்கள் தென்பட்டது. இந்த போஸ்டர் அருகிலேயே சு.வெங்கடேசன் நின்று புகைப்படம் எடுத்ததும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

கடந்த ஐந்தாண்டுகளாக எம்.பி.யாக இருக்கும் சு.வெங்கடேசன், தொகுதிப் பக்கம் அவ்வளவாக தலைகாட்டவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணிக் கட்சியான தி.மு.க.வினரே தங்களுக்குள் முணுமுணுக்கின்றனர்.

இந்த நிலையில்தான் இம்முறை சு.வெங்கடேசனை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் முன்னாள் திருப்பரங்குன்றம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவருமான சரவணன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமியின் குட் புக்கில் இடம் பெற்றிருக்கும் டாக்டர் சரவணன், பொதுவாகவே நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

தனது மருத்துவ சேவையின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் டாக்டர் சரவணன், இந்த முறை மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற விடமாட்டார் என்கிறார்கள். எனவே, மதுரையின் தேர்தல் கள நிலவரம் தற்போது மாறத் தொடங்கியிருக்கிறது என்கிறார் மதுரை மண்ணின் மைந்தர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal