இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி அளிக்கும் புதிய மனுவை விரைவாக பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு, அதிமுக பெயர் மற்றும் கட்சிக்கொடியை பயன்படுத்துவது தொடர்பாக தங்களது தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவை விரைவாக பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி ஓபிஎஸ் ஆதரவாளரான வா.புகழேந்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சச்சின் தத்தா முன்பாக நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரான புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது இம்ரான் அஹமது, ‘‘இந்த பிரச்சினை 2017 முதல் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. எனவே அதிமுகவின் பெயர், கட்சிக்கொடி, இரட்டை இலை சின்னம் போன்றவற்றை பழனிசாமி தரப்பு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
மேலும், மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுவில் பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமி கையெழுத்திட அனுமதிக்கக் கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் தொடர்ச்சியாக மனுக்களைத் தாக்கல் செய்துள்ளோம். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.
அப்போது நீதிபதி, தமிழகத்தில் அதிமுக தற்போது இரு அணிகளாக உள்ளதா என்றும், அதனால் தான் இரு தரப்பும் உரிமை கோருகிறதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், ‘‘அதிமுக என்பது ஒரே அணியாகத்தான் உள்ளது. யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ அவர்களுக்கே கட்சியும், சின்னமும் கொடுக்கப்படும்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே எங்களை அங்கீகரித்து விட்டது. அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத புகழேந்தி ஏற்கெனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். இந்த வழக்கைத் தொடர அவருக்கு எந்த உரிமையும் இல்லை. கட்சியின் அனைத்து எம்எல்ஏ-க்களும் பழனிசாமி பக்கமே உள்ளனர்” என வாதிட்டிருந்தார்.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அங்கித் அகர்வால், ‘‘மனுதாரரால் ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட மனுக்களுக்கும், இரட்டை இலை சின்னம் தொடர்பான ஒதுக்கீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.
அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “அப்படியென்றால் இரட்டை இலை சின்னம் தொடர்பாக உடனடியாக புதிய மனுவை தேர்தல் ஆணையத்தில் வழங்க தயாராக இருக்கிறோம். அந்த மனுவை விரைவாக பரிசீலிக்க ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சச்சின் தத்தா நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘‘இரட்டை இலை சின்னம் தொடர்பாக மனுதாரரான புகழேந்தி மீண்டும் புதிதாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தால், அந்த மனுவை தேர்தல் ஆணையம் சட்டத்துக்குட்பட்டு விரைவாக பரிசீலிக்க வேண்டும். அதே நேரம் மனுதாரரால் அளிக்கப்படும் புதிய மனுவின் தகுதிகள் குறித்து இந்த நீதிமன்றம் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க வில்லை” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.
இதனிடையே, மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மனு அளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பாஜக கூட்டணியில் இணைந்து மக்களவை தேர்தலை எதிர்கொள்ள உள்ளார். இந்நிலையில் இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம். அது எப்படி என்பது பரம ரகசியம் என பன்னீர்செல்வம் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே அவர் நேற்று தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைப் பொறுப்புகளான ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் வரும் மார்ச் 26-ம் தேதி வரை செல்லத்தக்கது. அதனால் ஒருங்கிணைப் பாளராக உள்ள என்னை அங்கீகரித்து வரும் மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எனக்கு ஒதுக்க வேண்டும்.
இந்த தேர்தலில் எனது தரப்பு வேட்பாளர்களின் ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரத்தையும் எனக்கு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.