உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டிருந்த வழக்கில் விழுப்புரம் சிறப்பு கோர்ட்டு பொன்முடியையும், அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்து 2016-ம் ஆண்டு தீர்ப்பு கூறி இருந்தது. இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு மறுபடியும் விசாரித்து சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து அதன் பிறகு பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.  இதனால் பொன்முடி அமைச்சர் பதவியையும் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். சட்டசபை செயலகமும் பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த திருக்கோவிலூர் தொகுதியை காலியிடமாக அரசிதழில் வெளியிட்டது.

இந்த நிலையில் பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில், குற்றவாளி என தீர்மானித்த ஐகோர்ட்டின் உத்தரவை நிறுத்தி வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். அவரது தண்டனைக்கு தடையும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு வந்த நாளில் இருந்து பொன்முடி மறுபடியும் எம்.எல்.ஏ.ஆகி விட்டதாகவும், ராகுல்காந்தி விஷயத்தில் கடைபிடிக்கப்பட்டது பொன்முடிக்கும் பொருந்தும் என்று தி.மு.க. வழக்கறிஞர் வில்சன் எம்.பி. கருத்து தெரிவித்தார்.

சபாநாயகர் அப்பாவு கூறுகையில், ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் ராகுல் காந்தி விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதே போல் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தார். இந்நிலையில், பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில் தீர்ப்பின் நகல் வெளியானது. இதனால் பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார். மேலும், தீர்ப்பு நகல் சட்டப்பேரவை செயலாளரிடம் கிடைத்தவுடன் திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்ப பெறப்படும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal