நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதற்காக அதிமுகவினர் தொகுதி பங்கீட்டு குழுவோடு ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தங்களது அணியை பலப்படுத்த கூட்டணி கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக தொகுதி பங்கீட்டை தீவிரப்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக தங்கள் கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதியும், விடுதலை சிறுத்தை மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதியும், முஸ்லிம் லீக் மற்றும் கொமதேகவிற்கு ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 22 இடங்களில் திமுக போட்டியிடவுள்ளது.

அதே நேரத்தில் கடந்த 4 வருடமாக கூட்டணியில் இருந்த அதிமுக, பாஜகவில் இருந்து வெளியேறிவிட்டதால், இரண்டு கட்சிகளும் தங்கள் தலைமையில் புதிய கூட்டணியை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாஜகவில் தற்போது வரை தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே, புதிய நீதி கட்சி, ஜான்பாண்டியன், தேவநாதன் ஆகியோருடைய கட்சிகள் இணைந்துள்ளது. விரைவில் பாமகவும் இணையும் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது வரை அதிமுக கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளது.

இந்த கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாய புலிகள் பேசுவார்த்தை நடத்தியுள்ளது. அதிமுக கூட்டணி பேசுவார்த்தை குழு நிர்வாகிகள் முனுசாமி, திண்டுகல் சீனிவாசன், பெஞ்சமின் ஆகியோரை மன்சூர் அலிகான் சந்தித்து பேசுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது தங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யும் படி கோரிக்கை விடுத்தாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா இருக்கும் போது, சிறிய கட்சிகள் அ.தி.மு.க.விற்கு ஆதரவு கடிதம் கொடுப்பதற்கே காத்திருப்பார்கள். ஆனால், தற்போது, மன்சூர் அலிகானுடன் எல்லாம் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என பேசுவதுதான், அ.தி.மு.க.வின் நிலைமையைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal