போதை பொருள் கடத்தல் மன்னன் சாதிக்கின் நண்பர் சதாவை போதை தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை ஆயிரம் விளக்கில் போதைப் பொருள் குடானையும் கண்டுபிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவில் இருந்து தேங்காய் பவுடர், திராட்சை உலர் பழங்கள் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து மெதம்பெடமைன் எனும் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் முக்கிய வேதிப்பொருளான சூடோபெட்ரினை, சர்வதேச நாடுகளுக்கு கடத்தி வந்துள்ளனர்.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட உணவு பொருட்களில், போதைப்பொருள் இருப்பது அந்நாட்டு அதிகாரிகளால் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்துதான் அந்த பார்சல் வருகிறது என்பதை உறுதிப்படுத்திய அந்நாட்டு அதிகாரிகள், டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவித்தனர். அது தொடர்பான விசாரணையில், மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த பிப்ரவரி 15ஆம்தேதி மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது போதைப்பொருளை ஹெல்த்மிக்ஸ் உணவு பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து பேக்கிங் செய்து கொண்டிருந்த, சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். குடோனில் நடத்திய சோதனையில் 50 கிலோ போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், போதை பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் தொழிலதிபருமான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது.
போதைப் பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக் சிக்கியதையடுத்து அவர் திமுகவில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார். விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் கடந்த மாதம் 23-ஆம் தேதி அதிகாரிகளால் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.
அவரது வீட்டில் சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி வீட்டுக்கு சீல் வைத்தனர். மேலும் ஜாபர் சாதிக், வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பப்பட்டது. அவரது வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக் தலைமறைவானார். டெல்லியில் பதுங்கியிருந்தபோது சனிக்கிழமை கைது செய்யப்பட்டார் ஜாபர் சாதிக். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் தோண்ட தோண்ட கிளம்பி வரும் பூதம் போல தொடர்புகள் சிக்கியுள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், 3 ஆயிரத்து 500 கிலோ போதைப்பொருள் தயாரிப்புக்கான மெதம்பெடமைன் மூலப் பொருளை, சர்வதேச நாடுகளுக்கு கடத்திய ஜாபர் சாதிக், கோடிக்கணக்கில் பணம் பார்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு இரண்டாயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். ஜாபர் சாதிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவரிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் ஜாபர் சாதிக் கூட்டாளி சதா என்பவரை சென்னையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் கடத்தலுக்காக சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் குடோன் பயன்படுத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சதாவை கைது செய்த காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.