அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள புதிய தமிழகம் கட்சி தென்காசி, நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளை கேட்டு உள்ளது. எந்தெந்த தொகுதிகள் கிடைக்கும் என்ற விவரம் ஓரிரு நாளில் தெரியவரும் என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் பங்கீடு முடித்து, அடுத்த கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது.

தேசிய கட்சியான பாஜக தங்களுடன் இணையும் கட்சிகளை உறுதி செய்து, அக்கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அதேநேரத்தில், எதிர்க்கட்சியான அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இணைந்தது.

இக்கட்சி முன்பு, பாஜக கூட்டணியில் தென்காசி தொகுதியை எதிர்பார்த்தது. ஆனால், அந்த தொகுதி கிடைக்காத அதிருப்தியில், கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணியில் இணைந்தது. தற்போது, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இது குறித்து புதியதமிழகம் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் தென்காசி, நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளை கேட்டு இருக்கிறோம். தென்காசி தொகுதி உறுதியாக கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

நீலகிரி, பொள்ளாச்சி தொகுதி கேட்பதற்கு முக்கியக் காரணம், அங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எங்கள் தலைவர் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளனர். இந்த தொகுதிகள் கிடைத்தால், கட்டாயம் வெற்றி பெறுவோம். தொகுதிகள் விவரம் ஓரிருநாளில் தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal