இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பி.எஸ். பேசியிருப்பதுதான், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும், எடப்பாடி பழனிசாமியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளது. அதிகார போட்டி காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என பிரிந்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம் சட்டப்போராட்டம் நடத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமி தான் கட்சியின் பொதுச்செயலாளர் எனவும், அவருக்கே இரட்டை இலை சின்னம் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இருந்த போதும் ஓ.பன்னீர் செல்வம் தொடர் சட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடவுள்ளார். இதற்காக இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் தங்கள் அணிக்கு 5 தொகுதிகளை ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கேட்பதாக தகவல் வெளியானது. ஆனால் பாஜக தரப்போ இரண்டு தொகுதி மட்டுமே கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளது. மேலும் ஓ.பன்னீர் செல்வம் அணி கேட்கும் ஒரு சில தொகுதிகளை டிடிவி அணியும் கேட்பதால் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பாஜகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், பாஜகவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது.

ஒரே தொகுதியை இரு தரப்பும் கேட்பதால் சிக்கல் நீடிக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், பாஜக கூட்டணி ஒரு மெகா கூட்டணி, ஒரே தொகுதியை இரண்டு மூன்று பேர் கேட்க கூடிய வாய்ப்பு உள்ளது. பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படும் என கூறினார். இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கேட்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், உறுதியாக இரட்டை இலை சின்னத்தை தான் கேட்போம், அதில் தான் போட்டியிடுவோம் என தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal