பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் எந்த கூட்டணியில் இடம்பெறப் போகிறது என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் இரு கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளை திரை மறைவில் மேற்கொண்டன. அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினார். அப்போது பா.ம.க. தரப்பின் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்து எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தார். அதில் பா.ம.க. கேட்ட தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. ஒத்துக்கொண்டது.

ஆனால் மேல்சபை பதவியை வழங்க மறுத்து விட்டது. மேலும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் தொடர்பாகவும் பா.ம.க. தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை அ.தி.மு.க. ஏற்கவில்லை. இந்த தகவல்களை சி.வி.சண்முகம் 2-வது முறையாக டாக்டர் ராமதாசை சந்தித்து பேசியபோது எடுத்து கூறினார். இதனால் இரு கட்சிகளிடையேயும் கூட்டணி அமைவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதையடுத்து பா.ம.க. வுடன் பா.ஜனதா ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது தேவையான தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்திய பா.ம.க. அவர்களுக்கு சாதகமான வடமாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கேட்டது.

மேலும் டெல்லி மேல்சபை பதவி உள்பட சில நிபந்தனைகளையும் விதித்தது. இது தொடர்பாக டெல்லி தலைவர்கள் ஆலோசித்து வந்தனர். மேலும் டெல்லி மேலிடத்தின் முடிவுகளை தெரிவிக்கவும், பா.ம.க.வை தங்கள் பக்கம் இழுக்கவும் மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கிஷன்ரெட்டி ஆகியோரை தமிழகத்துக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் இருவரும் சென்னை தி.நகரில் டாக்டர் ராமதாசை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது பா.ஜனதா தரப்பில் ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றி கூறினார்கள். மற்ற நிபந்தனைகளை ஏற்காததால் பா.ஜனதாவின் முயற்சி தோல்வி அடைந்தது.

இதேபோல் தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க.வும் முயற்சி செய்தது.
அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்தது. அதை தொடர்ந்து தே.மு.தி.க.வினர் மீண்டும் பேசினர். இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என்று கூறப்படுகிறது. அப்போது தே.மு.தி.க. விதித்த நிபந்தனைகளையும் அ.தி.மு.க. தரப்பில் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அடுத்தகட்ட நடவடிக்கையில் பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் ஈடுபட்டு உள்ளன. அ.தி.மு.க. தரப்பில் இருந்து 3-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரும் என்ற நம்பிக்கையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா காத்திருக்கிறார்.

இந்த இரு கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க பா.ஜனதா எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டது. எனவே பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal