தமிழகத்தில் இந்தியா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையில் சந்திக்கிறது. அந்த கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்று உள்ளன. இதில் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் தலா இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

அந்த தொகுதிகள் எவை என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 2019-ம் ஆண்டு தேர்தலில் தந்தது போல தங்களுக்கு 10 தொகுதிகள் வேண்டும் என்று கேட்கிறது. ஆனால் தி.மு.க. 8  தொகுதிகளை மட்டுமே ஒதுக்க இயலும் என்று கூறி வருகிறது. இதனால் தி.மு.க.-காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதுபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு 2 தனி தொகுதிகளும், ஒரு பொது தொகுதி வேண்டும் என்பதில் தொடக்கம் முதலே உறுதியாக இருக்கிறது. இதனால் விடுதலை சிறுத்தைகளுடன் தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்தது.

அதுபோல ம.தி.மு.க.வும் 2 தொகுதிகள் கேட்டதால் முடிவு எட்டப்படாமல் இருந்தது.
நேற்று ம.தி.மு.க. உயர் நிலைக் குழு கூட்டம் சென்னையில் கூடி இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது. அப்போது 2019-ம் ஆண்டு தேர்தலை போல ஒரே ஒரு தொகுதியை ஏற்றுக்கொள்வது என்றும் ஒரு மேல்சபை தொகுதியை கேட்டு பெறலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த இழுபறிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 தினங்களாக தி.மு.க. மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். 10-ந்தேதி வேட்பாளர் தேர்வை தொடங்க இருப்பதாகவும் வெள்ளி, சனி இரண்டு நாட்களுக்குள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அதன் பேரில் பேச்சு நடத்த வருமாறு ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தி.மு.க. தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று காலை 10.30 மணிக்கு தலைமை செயலகத்துக்கு சென்றார். அங்கு அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இருவரும் தொகுதி பங்கீடு குறித்து மனம் விட்டு பேசினார்கள். இதில் ஒருமித்த கருத்து உருவானதாக தெரிய வந்துள்ளது. இதற்கிடையே வைகோவும் ஒரு தொகுதியை ஏற்க முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் அறிவாலயத்துக்கு வந்தார். அங்கு தொகுதி பங்கீடு குறித்து அவர் தி.மு.க. தலைவர்களுடன் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal