பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. எந்த பக்கம் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அ.தி.மு.க. தரப்பில் சி.வி. சண்முகம் எம்.பி. 2 முறை டாக்டர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் வரை கொடுக்க முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பா.ம.க. தரப்பில் மேல்சபை பதவியும் கேட்பதால் உறுதிப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பா. ஜனதா தரப்பிலும் பா.ம.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. டாக்டர் ராமதாஸ் இன்று சென்னை வருகிறார். சென்னையில் அவர் தங்கியிருக்கும் போது பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் தமிழகத்தில் பா.ம.க.வுக்கு சாதகமாக இருக்கும் என்றும் பா.ஜனதாவுடன் இணைந்தால் டெல்லியில்  பொறுப்புகள் கிடைக்கலாம். எனவே கட்சி நலன் கருதி அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் அ.தி.மு.க.வுடன் இணைந்து வெற்றி பெற்றாலும் எந்த புண்ணியமும் இல்லை. மத்தியில் மோடி ஆட்சி அமைந்தால் பொறுப்புகள் பெறுவதன் மூலம் கட்சியையும் பலப்படுத்த முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். எனவே எந்த பக்கம் சாய்வது? என்ன முடிவெடுப்பது என்ற தடு மாற்றத்துடன் இருக்கிறார்கள். நாளை (9-ந்தேதி) வரை காத்திருக்கும்படி அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருந்தார். எனவே நாளைக்குள் பா.ம.க. முடிவு தெரியும் என்று கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal