வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வில் போட்டியிட இளைஞரணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக தலைமையிடம் வலியுறுத்தி வருகிறார் அமைச்சரும் மாநில இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்.
தி.மு.க. இளைஞரணியில் யாருக்கு கல்தா..? யாருக்கு போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றி அறிவாலத்தில் உள்ள மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், தி.மு.க.வைப் பொறுத்தளவில் வாரிசுகள் சிலர் விருப்பமனுக்கள் அளித்துள்ளனர். அதில் கே.என்.நேருவின் மகன் அருண் நேருக்கு பெரம்பலூர் தொகுதி உறுதியாகிவிட்டது. ஆனால், ‘இந்த முறை எப்படியாவது மகனை எம்.பி. ஆக்கிவிட வேண்டும்’ என துடித்தார் அமைச்சர் எ.வ.வேலு. ஆனால், அவரது மகன் கம்பனுக்கு தலைமை சீட் இல்லை என்று கூறிவிட்டதாம். ஏற்கனவே திருவண்ணாமலையில் இளைஞரணியைச் சேர்ந்த சிட்டிங் எம்.பி., அண்ணாதுரைக்குத்தான் மீண்டும் வாய்ப்பு என்பதில் தி.மு.க. தலைமை உறுதியாக இருக்கிறதாம். இவர் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருக்கிறார்.
அதே போல், தி.மு.க.வின் இளைஞரணி துணைச் செயலாளரும், உதயநிதிக்கு மிகவும் நெருக்கமானவருமான தூத்துக்குடி எஸ்.ஜோயல் திருநெல்வேலி அல்லது தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. ஏனென்றால், கடந்த சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், மேயர் வேட்பாளர் என ஜோயலை உதயநிதி முன்னிறுத்த முயற்சித்தார். சில அரசியல் காரணங்களுக்காக அது நடக்கவில்லை.
தற்போது, சேலத்தில் இளைஞரணி மாநாடு மிகவும் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் நினைப்பதை நடத்திக் காட்டுபவர்தான் எஸ்.ஜோயல் என்பதால், இந்த முறை தென் சென்னை அல்லது நெல்லை இரண்டில் ஒரு தொகுதியில் ஜோயலை நிறுத்தவேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார் உதயநிதி.
அதே போல் தி.மு.க. இளைஞரணியைச் சேர்ந்த ஈரோடு பிரகாஷும், ஈரோடு தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவருக்கும் உதயநிதி பச்சைக் கொடி காட்டிவிட்டார்’’ என்றனர்.
ஆக மொத்தத்தில், மகனை எம்.பி., ஆக்கி அழகு பார்க்க வேண்டும் என நினைத்த எ.வ.வேலுவின் நனவுதான் கனவாகிவிட்டது..!