பாராளுமன்ற தேர்தலில் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக முக்கிய கட்சிகளில் கூட்டணி அமைத்து வருகிறது. அந்த வகையில், அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதாக அக்கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இதைதொடர்ந்து, மத்திய அமைச்சர் எல்.முருகன், ஹெச்.ராஜா,  தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் சரத்குமாரை சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க பாஜகவுடன் இணைந்து செய்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சரத்குமார் தெரிவித்துள்ளார். மற்ற விபரங்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கப்படும் எனவும் சரத்குமார் கூறியுள்ளார்.

சரத்குமாரின் கூட்டணி முடிவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் பத்தாண்டு கால, ஊழலற்ற, நேர்மையான அரசின் செயல்பாடுகள் மீது முழு நம்பிக்கை கொண்டும், தேச நலனிற்காகவும், ஒருமைப்பாட்டிற்காகவும் நமது பிரதமர் அவர்கள் முன்னெடுக்கும் திட்டங்களால் ஈர்க்கப்பட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்பட முன்வந்திருக்கும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர், அண்ணன் சரத்குமார் அவர்களை தமிழ்நாடு பாஜக சார்பாக வரவேற்று மகிழ்கிறோம். அண்ணன் சரத்குமார் அவர்கள் வரவு, தமிழகத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிச்சயம் உந்துசக்தியாக அமையும் என்பது உறுதி” என்று பதிவிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal