தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வலுவான அணியை உருவாக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. இந்த கூட்டணியில் பா.ம.க. உள்பட மேலும் சில கட்சிகள் சேர உள்ளன. தே.மு.தி.க.வுடனான கூட்டணியை கடந்த 1-ந் தேதி அ.தி.மு.க. உறுதி செய்தது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின், கே.பி.அன்பழகன் ஆகியோர் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்து பேசினார்கள்.
அன்று நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையின்போது தே.மு.தி.க.வுக்கு 7 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. பதவியை ஒதுக்க வேண்டும் என்று பிரேமலதா கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக மீண்டும் சந்தித்து பேசிக் கொள்ளலாம் என அ.தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே இன்று மாலை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்று தே.மு.தி.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான பார்த்த சாரதி, இளங்கோவன், அழகாபுரம் மோகன் ராஜ் ஆகியோர் மாலை 4 மணி அளவில் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்று அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தையின்போது தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் முடிவாக உள்ளது. தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளை ஒதுக்குவதற்கு அ.தி.மு.க. முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இன்றைய பேச்சுவார்த்தையின்போது இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் அடுத்தகட்டமாக பா.ம.க. உள்பட மற்ற கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.