சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி தற்போது நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கபடவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், திமுக மற்றும் அதிமுக தங்கள் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் லீக், கொமதேக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கியுள்ளது. அடுத்தாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் அடுத்த கட்ட தொகுதி பங்கீட்டை விரைவில் தொடங்கவுள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சியானது தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

அதிமுக தனது கூட்டணியை பலப்படுத்தும் வகையில் தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை தங்கள் அணிக்கு இழுத்துள்ளது. இதனையடுத்து தற்போது திமுக கூட்டணியில் இருந்த அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சியையும் தங்கள் அணியில் இணைத்துள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி மாநில தலைவர் கதிரவன் சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதாக ஆலோசனை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கதிரவன், ‘‘அகில இந்திய அளவில் நாங்கள் இந்திய கூட்டணியில் இருந்தாலும், தமிழகத்தில் எங்கள் கட்சி மாநில குழு எடுத்த முடிவின்படி பாரதிய ஜனதா கட்சி இல்லாத அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம்.

திமுகவில் மரியாதை இல்லை. என்பதற்காக அந்தக் கூட்டணியில் இருந்து விலகி வந்துள்ளோம். அதிமுக கூட்டணியில் தேனி அல்லது ராமநாதபுரம் ஆகிய இரண்டு தொகுதியில் ஏதாவது ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு எங்கள் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் வர உள்ளனர்’’ என தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal