தமிழக காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் குறைக்கப்படுவதை ஏற்க முடியாது என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் ஈ.வி.கே.சம்பத்தின் 98-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் அவருடைய உருவப் படத்துக்கு கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சியின் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, துணைத் தலைவர் கோபண்ணா மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது: பிரதமர் மோடி அடுத்த முறை தமிழகத்துக்கு வரும்போது தமிழக மக்களின் வரவேற்பு வேறு விதமாக இருக்கும். தமிழக காங்கிரஸ் கடந்த 5 முறை திமுகவுடனான கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்துள்ளது.

இன்றைய சூழலில் காங்கிரஸ் தான் திமுக. திமுகதான் காங்கிரஸ். மதச்சார்பின்மையில் 100 சதவீதம் ஒன்றாக இருக்கிறோம். தொகுதி பங்கீடு, எண்ணிக்கை பங்கீடு என்பதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. மோடியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் ஒற்றை கருத்து கொண்ட கட்சியாக இரு கட்சிகளும் இருக்கின்றன.

எனவே எங்களுக்குள் வேறுபாடு எதுவும் இல்லை. காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தொகுதிகள் பிரிக்கப்படும். மறைந்த தலைவர் காமராஜர் காலத்தில் இருந்த காங்கிரஸ் இப்போது இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் குறைக்கப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது உண்மையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal