மூன்றாவது முறையாக பிரதமர் நாற்காலியில் அமர நரேந்திர மோடி ‘வட இந்திய’ வியூகத்தை வகுத்திருக்கிறார். தென்னிந்தியா கைகொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், வட இந்தியாவையே பா.ஜ.க. குறி வைத்து காய் நகர்த்தியிருக்கிறது.

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என முனைப்புக் காட்டி வருகிறது பாஜக. இன்னும் எதிர்க்கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யாத நிலையில், பாஜக தனது முதல்கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிட்டிருக்கிறது. அதில் மோடி, அமித் ஷா உள்ளிட்ட முக்கியமான நட்சத்திர வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கேரளா, தெலங்கானா மாநிலம் மட்டுமே முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வட இந்தியாவை மையப்படுத்தியே இருந்தது.

மக்களவைத் தேர்தலுக்கான பாஜக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் கடந்த 29-ம் தேதி நடத்தப்பட்டது. அன்று பின்னிரவு 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் அடுத்த நாள் காலை 4 மணி வரை நடந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்னதாகவே பாஜக தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட தீவிரம் காட்டியது. கடந்த மக்களைவைத் தேர்தலிலும் பாஜக இப்படியான யுக்தியைக் கையாண்டது குறிப்பிடதக்கது. இன்னும் பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி உறுதியாகாத நிலையில், பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று மார்ச் 2-ம் தேதி வெளியிட்டது.

இந்தப் பட்டியலில் 34 மத்திய அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் 2 முன்னாள் முதல்வர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளன. முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் மொத்தமுள்ள 195 பேரில் 28 பெண்கள், 47 வேட்பாளர்கள் 50 வயதுக்குட்பட்டவர்கள், 57 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள், 27 பட்டியலின வேட்பாளர்கள், 18 பழங்குடியின வேட்பாளர்கள் ஆவர்.

தவிர, தென்னிந்தியாவில் பாஜக எதிர்ப்பார்த்த முன்னேற்றம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். எனவே, வட இந்தியாவை டார்கெட் செய்து வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க பாஜக முயன்று வருகிறது. இதனால், முதல்கட்ட வேட்பாளர்கள் வட இந்திய தொகுதிகளில் அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தென்னிந்தியாவை பொறுத்தவரை கேரளா, தெலங்கானா மட்டுமே இடம்பெற்றிருந்தது.

குறிப்பாக, கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தேசியத் தலைவர் நட்டா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பாஜகவுக்கு சாதகமற்ற தொகுதிகள் பற்றி ஆலோசனை நடத்தியிருந்தனர் . இதனால், மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் முன்னதாக உத்தரப் பிரதேசம் உட்பட பிற வடமாநிலங்களில் தங்கள் செல்வாக்கு குறைந்த மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை முதலில் வெளியிட பாஜக திட்டமிட்டிருந்தது.

அதன்படிஉத்தரப் பிரதேசத்தில் 51, மேற்கு வங்கத்தில் 20, மத்தியப் பிரதேசத்தில் 24, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தலா 15, கேரளாவில் 12, தெலங்கானாவில் 9, அசாமில் 11, ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கரில் தலா 11 டெல்லியில் 5 , ஜம்மூ காஷ்மீரில் 2, உத்தராகண்டில் 3, அருணாச்சல் பிரதேசத்தில் 2, கோவா, திரிபுரா ஆகியவற்றில் தலா ஒரு தொகுதி என மொத்தமாக 195 வேட்பாளர்களை முதல்கட்டமாக அறிவித்துள்ளது பாஜக.

வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் தென்னிந்தியாவைக் கவனத்தில் கொள்வதற்கு பதிலாக, வடமாநிலங்களில் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி அதிக தொகுதிகளில் வெல்ல காய்களை நகர்த்தி வருகிறது பாஜக. அதன் முன்னோட்டமாகத் தான் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வட இந்தியாவை மையப்படுத்தி அறிவித்திருக்கிறது. அதே சமயம் தென்னிந்தியாவிலும் கடந்த முறையைக் காட்டிலும் பி.ஜே.பி. கூடுதல் தொகுதிகளில் வெள்ள வாய்ப்பிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal