நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுடன் தொகுதிப் பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தி.மு.க திட்டமிட்டிருந்தது. ஆனால், இன்று அந்தப் பேச்சுவார்த்தையில் திருமாவளவன் பங்கெடுக்கவில்லை. இந்த நிலையில், இன்று அம்பேத்கர் திடலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையகத்தில் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், ‘‘இன்று (நேற்று) நடந்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், தேர்தல் அறிக்கைக் குழு, தேர்தல் நிதிக் குழு, தலைமையக ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் பரப்புரை ஒருங்கிணைப்புக் குழு என நான்கு குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றன. உயர்நிலைக் குழுக் கூட்டம் முடிவதற்குத் தாமதமானதால், தி.மு.க கூட்டணித் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இன்னொரு நாளுக்கு மாற்றித் திட்டமிட்டிருக்கிறோம்.

இது தொடர்பாகத் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை தொகுதிப் பங்கீடு குறித்து முதல்வரைச் சந்திக்கும் அவசியம் ஏற்பட்டால், சந்திப்போம். இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்த தொண்டர்கள், வி.சி.க 4 தொகுதிகள் கேட்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார்கள். அதில் குறைந்தபட்சம் 3 தொகுதிகளாவது கேட்டுப் பெறுவது நலம் எனப் பேசியிருக்கிறோம்.

புரிதலோடு இயங்கும் கட்சிதான் தி.மு.க என்பதால், பேச்சுவார்த்தையில் எந்த சிக்கலும் இருக்காது. இந்தியா கூட்டணியுடன்தான் உறுதியாக இருக்கிறோம். கூடுதல் தொகுதி கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. அதைத்தான் இன்றும் பேசினோம். காங்கிரஸின் காயத்துக்கு எங்களிடம் மருந்திருக்கிறது என அ.தி.மு.க தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் தலைமையில்தான் இந்தியா கூட்டணி இயங்கிக்கொண்டிருக்கிறது. அதை ஒருங்கிணைத்ததில் முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியப் பங்கிருக்கிறது.

ஆனால், தி.மு.க – காங்கிரஸ் இடையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஒருநாள் இரண்டுநாள் தாமதமாகுமே தவிர, கூட்டணி உறுதியாக இந்தியா கூட்டணியுடன்தான். எனவே, இளவுகாத்த கிளியாக யாரும் காத்திருக்க வேண்டாம். 2006 முதல் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுகிறோம். இந்தத் தேர்தலிலும் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம். தி.மு.க மெகா கூட்டணியில் இருக்கிறது. அதில் 10 கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன. அதனால் தொகுதி பங்கீட்டில் கொஞ்சம் இழுபறி இருக்கத்தானே செய்யும்.

எங்களின் உழைப்பு, பங்களிப்பு, வலிமை, கொள்கை உறுதி குறித்தெல்லாம் முதல்வர் நன்கு அறிவார். எனவே எங்களின் பரஸ்பர புரிதலில் தொகுதிப் பங்கீடு நிர்மாணிக்கப்படும். அ.தி.மு.க, பா.ஜ.க போன்ற கட்சிகள் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பரபரப்பாக இல்லை. அதனால், மொத்த ஊடகமும் தி.மு.க கூட்டணி பக்கம் திரும்பியிருக்கிறது. அதனால்தான் சிறு சலசலப்பும் பெரிதாகப் பேசப்படுகிறது. மற்றபடி தொகுதிப் பங்கீட்டின் போது இருக்கும் இயல்பு நிலைதான் தொடர்கிறது’’எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், தேர்தல் கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணி கிடையாது. வெற்றிக்கான வியூகத்தை வகுத்து அமையும் கூட்டணிதான். இந்த முறை தி.மு.க. திருமாவுக்கு 2 தொகுதிகளுக்கு மேல் தர வாய்ப்பில்லை. அதாவது ஒரு பொது தொகுதி, மற்றொன்று தனி தொகுதி. ஆனால், திருமாவும் 3 தொகுதிகளை கேட்டுப் பெறுவதில் உறுதியாக இருக்கிறார்.

எனவே, இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில்தான், திருமாவுக்கு 3 தனித் தொகுதி, ஒரு பொதுத் தொகுதியை வழங்குகிறோம் என அ.தி.மு.க. தூது விட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. எனவே, அரசியல் களத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal