தமிழகத்தில் கடந்த 2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர் உள்ளிட்ட 7 பேர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு, லஞ்ச ஒழிப்பு தரப்பில், குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆவணங்கள் இல்லை என்பதால் மேற்கொண்டு வழக்கை நடத்தவில்லை எனவும் புகாரை திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிக்கை அளித்தது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்க்கு எதிரான வழக்குகளில் இருந்து அனைவரையும் விடுவித்து 2012-ம் ஆண்டு சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு தடைக்கோரி ஓ.பி.எஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஓ.பன்னீர் செல்வம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
வழக்கின் தன்மை, தகுதியின் அடிப்படையிலேயே தனி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் இந்த வழக்குகளை விசாரிப்பதாகவும் எனவே இதில் தலையிட விரும்பவில்லை எனவும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.