தென் மாவட்டங்களில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் எடப்பாடியார் போட்டியிட வேண்டும் என அவரது பெயரில் டாக்டர் சரவணன் இன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை அளித்தார்.
அதிமுக சார்பில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்க, மனு விநியோகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுலகத்தில் கடந்த பிப்.21-ம் தேதி தொடங்கியது. விருப்ப மனுக்களை பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.20 ஆயிரம், தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.15 ஆயிரம் கட்டணத் தொகையை செலுத்தி வாங்கினர்.
இதுவரை சுமார் 1400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பூர்த்தி செய்து வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விருப்ப மனுக்களை பெறவும், பூர்த்தி செய்து தரவும் இன்றே கடைசி நாள். இதனால் இன்று அதிக எண்ணிக்கையில் விருப்ப மனுக்களை கொடுத்தனர்.
குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் விருப்ப மனுக்களை அளித்தார். மேலும், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் டாக்டர் சரவணன் போட்டியிட விருப்ப மனு கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு உள்பட பலர் கலந்துகொண்டனர். அ.தி.மு.க.வில் இன்றே கடைசி நாள் என்பதால் ராயப்பேட்டை அ.தி.மு.க. அலுவலகம் களைகட்டியது.