திருச்சி என்றாலே மலைக்கோட்டை நினைவுக்கு வருகிறதோ இல்லையோ… அமைச்சர் கே.என்.நேருதான் நினைவுக்கு வருவார். காரணம், உடன் பிறப்புக்களுக்கு எப்போதுமே ‘அமைச்சராக’ திகழக்கூடியவர் தற்போதை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு!

அமைச்சராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரது அலுவலகத்தில் நேருவின் வருகைக்காக நூற்றுக்கணக்கானோர் தினம்தோறும் காத்திருப்பார்கள்.

மார்ச் 1 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தன்று, தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களும் கொடுக்கப்பட்டது. தி.மு.க. சார்பில் விருப்பமனுக்கள் இன்றிலிருந்து பெறப்பட்ட நிலையில், பெரம்பலூர் தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருதான் போட்டியிடப் போகிறார் என்று ஆறு மாதகாலமாகவே தகவல்கள் கசிந்தன. அதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக சமீபத்தில் முசிறியில் தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற பொதுக்கூட்டமும் நடந்தது.

இந்த நிலையில்தான் இன்றைய தினம் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 32 பேர் விருப்பமனுக்கள் கொடுத்துள்ளனர். இன்னும் நிறைய பேர் அருண் நேரு போட்டியிட வேண்டும் என விருப்பமனு கொடுக்கவும் இருக்கிறார்கள்.

தி.மு.க.வில் ஒருவர் போட்டியிட வேண்டும் என 32 பேருக்கும் அதிகமானோர் விருப்ப மனு கொடுத்திருப்பது இதுவே முதன்முறையாகும். இந்த விஷயம்தான் அமைச்சர் கே.என்.நேருவையும், அருண் நேருவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal