நெல்லை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. மத்திய அரசிற்கு மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டி இருந்தது.
மேலும் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரி தொடர்பான நிலுவை தொகைகளை திருப்பி தராமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்ட நிலையிலும் எந்த நிதியையும் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்காமல் உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு காங்கிரஸ் கட்சி அலுவலகம் முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
மேலும் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் வீட்டிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் வீட்டில் திரண்ட காங்கிரஸ் கட்சியினர் நெல்லை வரும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது வீட்டில் இருந்து பாளை பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலை வரை கருப்பு கொடிகளை ஏந்தி மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து பெரியார் சிலை முன்பு கருப்பு பலூன்களை பறக்கவிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அவர்களை போலீசார் வழிமறித்து கைது செய்தனர்.