நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், திமுகவும் அதிமுகவும் ஒருபக்கம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தி கொண்டிருக்க, மறுபுறம் எதிர் அணியை குறிவைத்து எந்தெந்த வகைகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது என தனி குழு அமைத்து பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் ஒருவரை ஒருவர் விமர்சித்து போஸ்டரை ஒட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் எந்தவித கட்சியில் அடையாளமும் இல்லாமல் முதலில் ‘கண்டா வரச் சொல்லுங்க’ என போஸ்டர் ஒட்டப்பட்டது. இதனை தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் தொகுதி பக்கம் எட்டிபார்க்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்று அதிமுகவினர் தான் போஸ்டர் அடித்து ஒட்டியது தெரியவந்தது.

ஒருபடி மேலே போய் திமுக எம்.பி ஆ.ராசாவின் அலுவலக சுவரிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களிலும் அந்த போஸ்டர்களை பகிர்ந்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுகவின் ‘கண்டா வரச் சொல்லுங்க’ பிரச்சாரத்தை ஓவர்டேக் செய்யும் வகையில், அதே ஸ்டைலில் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்து சென்னை உட்பட தமிழ்நாடு முழுக்க திமுகவினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டர்களில், ‘பதவிக்காக மாநில உரிமைகளை அடகு வைத்த அடிமைகளை கண்டா வர சொல்லுங்க’ எனவும் ‘நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுகவுடன் கூட்டணி வைக்க கட்சிகள் தேவை.. கண்டா வர சொல்லுங்க’ எனவும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுகவுடன் கூட்டணி வைக்க கட்சிகள் தேவை என அச்சடிக்கப்பட்டுள்ளது அதில் தேவையான தகுதிகள் என குறிப்பிட்டு, பாஜகவை எதிர்ப்பது போல் நடிக்கத் தெரிந்த கட்சிகளுக்கு முன்னுரிமை, கட்சியில் 10 பேரோ அல்லது ஒருத்தரோ இருந்தால் கூட போதும். குறிப்பாக சுயமரியாதை, சூடு சொரணை இருக்கவே கூடாது.

முக்கியமாக நாங்கள்தான் உண்மையான அதிமுக என்பதை நம்ப வேண்டும் என வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் வரவேண்டிய இடம் என அதிமுக தலைமை அலுவலகம், ராயப்பேட்டை, சென்னை என அந்த விளம்பரத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே திமுக- அதிமுக நடத்தி வரும் போஸ்டர் யுத்தம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,வரும் நாட்களில் இன்னும் தீவிரமடையும் என்றே எதிர்பார்க்கலாம்

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal