தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து மகளிரணி நிர்வாகிகள், மகளிரணியினருக்கு சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி. பேசுகையில், ‘‘வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் என்பது நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமான தேர்தல். மிகவும் கஷ்டப்பட்டு தான் பெண்கள் தங்கள் உரிமைகளை பெற்றுள்ளோம். ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருதம் படித்தால் மட்டும் தான் மருத்துவராக முடியும் என்ற நிலை இருந்தது. அதையெல்லாம் மாற்றியது திராவிட இயக்கம். டெல்லியில் இருக்கக்கூடிய மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கஷ்டப்பட்டு போராடி பெற்ற உரிமைகளை பறிக்கின்றனர்.

மருத்துவத் துறையில் யார் வேண்டுமென்றாலும் படிக்கலாம் என்று கூறி இட ஒதுக்கீடு கொண்டு வந்தது திமுக. ஏழை, எளிய மக்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் அரசு மருத்துவ கல்லூரி இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்து இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகள் இருப்பது தமிழகத்தில் தான். இதையெல்லாம் ஒழிக்க கூடிய வகையில் தான் நீட் கொண்டு வந்துள்ளனர்.

நமக்காக உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் நமது குழந்தைகள் படிக்க முடியாத நிலையை கொண்டு வந்துள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தல் என்பது யார் ஜெயிக்கிறார்? யார் தோல்வி பெறுகிறார் என்பது கிடையாது. நம் குழந்தையின் எதிர்காலம் மற்றும் நாம் அமைதியாக வாழ்வதை முடிவு செய்யக்கூடிய தேர்தல். இந்த தேர்தல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மதரீதியானது. கோயிலுக்குப் போவது, வழிபடுவது, போகாமல் இருப்பது என்பது ஒவ்வொருவரின் நம்பிக்கைக்கு உட்பட்டது. தமிழகத்தில் இதுபோன்ற நிலைமை கிடையாது. இங்கு அனைவரும் சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ்கிறோம்.

மதத்தினை வைத்து நமக்குள் சண்டையை ஏற்படுத்தி அதில் அரசியல் லாபம் அடைய வேண்டும் என்று நினைத்தால் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கு இடையே சண்டை. இதுவரை பிரதமர் மோடி அங்கு சென்று பார்க்கவில்லை. அந்த மாநிலத்தில் இருக்கும் எல்லோரும் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தங்கி அவதியுற்று வருகின்றனர். அங்கு குழந்தைகள், பெண்கள் அனைவரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறனர். இப்படி சண்டைய மூட்டி பிரச்சனைகளை உருவாக்கி அதில் குளிர் காய்ந்து அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்களால் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். இதெல்லாம் இன்று தமிழகத்தில் இல்லை. இங்கு எல்லோரும் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ்கின்றனர். தமிழக அரசு மக்களை பாதுகாக்கிறது.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மேலும் அந்த திட்டத்திற்கான நிதி உதவிகளை தொடர்ந்து குறைத்துக் கொண்டிருக்கிறது. பல மாநிலங்களிலும் இதே நிலைதான் நடக்கிறது. மக்களுக்கான திட்டங்களை மத்திய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. மழை, வெள்ளம் பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்கவில்லை. தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கக்கூடிய ஜிஎஸ்டி வரிப்பாக்கி என்பது 20 ஆயிரம் கோடி உள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக முதல்வர் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும். மகளிர் உரிமைத் தொகையை கூட கொடுக்க முடியாத நிலை வந்துவிடும் என்று நம்முடைய முதலமைச்சரே சொல்லக்கூடிய அளவிற்கு தொடர்ந்து தமிழகத்திற்கு பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றனர்.

தமிழ்நாட்டுக்கு, தமிழ் மக்களுக்கு இங்கு இருக்க கூடிய சகோதர, சகோதரிகளுக்கு எதிராகவே இருக்கக்கூடிய ஆட்சி தான் மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சி. பாஜகவினர் தேர்தல் பிரசாரத்திற்கு வரும்போது எங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதி எங்கே என்று கேளுங்கள். மழை, வெள்ளத்தினால் சென்னை, தூத்துக்குடி பாதிக்கப்பட்ட போது எங்கே போயிருந்தீர்கள் என்று கேளுங்கள். மழை வெள்ளத்தினால் சேதமடைந்த வீட்டிற்கு எங்கள் முதல்வர் 4 லட்ச ரூபாய் கொடுத்தார். நீங்கள் என்ன கொடுத்தீர்கள் என்று கேளுங்கள். நாம் எல்லாவற்றுக்கும் பொருத்துப் போவோம் என்று நினைக்கிறார்கள். இங்கு உள்ள பெண்கள் பொங்கி எழுந்தாலே அவர்களை ஓட வைக்க முடியும் என்பதை புரிய வைப்போம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி என்பது இந்த நாட்டை பாதுகாக்க கூடிய வெற்றி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’’என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal