கொலை வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதனை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்திருக்கிறது.

சென்னை கொளத்தூரை சேர்ந்த மாற்றுத் திறனாளி புவனேஸ்வரன் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், கடந்த 2012 ஜனவரி 10ஆம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நிலத் தகராறு தொடர்பான பிரச்சனையில் இந்த கொலை சம்பவம் நடந்ததாக வழக்குப்பதிவு செய்த கொளத்தூர் போலீசார், சையது இப்ராகிம், செல்வம், முரளி, குமார் ஆகியோருக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், வில்லிவாக்கம் தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதனின் தூண்டுதலின்படி தான் தனது மகன் கொலை செய்யப்பட்டதாக புவனேஸ்வரனின் தந்தை சிவா குற்றம்சாட்டியதோடு, குற்றப்பத்திரிகையில் ரங்கநாதனின் பெயரை சேர்க்கவில்லை என்பதால், குற்றப்பத்திரிகையை ரத்து செய்து சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றப்பத்திரிகையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளதாக கூறி, அதை ரத்து செய்ததுடன், டி.எஸ்.பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் சி.பி.ஐ விசாரணை நடத்த 2014ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி விசாரணை நடத்திய சி.பி.ஐ, திமுக முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன், சையது இப்ராகிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தணிகாசலம், பாலசந்திரன் உள்பட 12 பேருக்கு எதிராக, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 2020 முதல் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில், சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை, இரு தரப்பு வாதங்கள் ஆகியவை முடிந்து தீர்ப்பிற்காக தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் நீதிபதி கே.ரவி இன்று தீர்ப்பளித்தார்.

புவனேஸ்வரன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். அரசுத் தரப்பில் சாட்சியங்கள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன் உள்ளிட்டோரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ரங்கநாதன் தமிழ்நாடு சேமிப்பு கிடங்குத் தலைவராக கடந்தாண்டு முதல் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 2011 வாக்கில், ரங்கநாதன் நில அபகரிப்பு வழக்கிலும், குண்டர் சட்டத்திலும் கைதாகி சிறையில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal