புதுச்சேரியில் ஒரு திருமண விழாவில் பங்கேற்ற தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம். பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் 10 ஆண்டாக தொடர்ந்து நீடித்து வருகிறோம். எடப்பாடி பழனிசாமிதான் கூட்டணியிலிருந்து சென்றுவிட்டார். இரட்டை இலையில் எப்படி போட்டியிடுவோம்? என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எல்லா  தீர்ப்புகளும் எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக தீர்ப்பாகத்தான் வழங்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் சிவில் சூட்டில் வழங்கப்படும் தீர்ப்பே இறுதியானது  எடப்பாடி பழனிசாமியை எந்த சூழ்நிலையிலும், யாரும் நம்ப தயாராக இல்லை என்ற நிலை அரசியலில் ஏற்பட்டுள்ளது. அவருக்கு யாரெல்லாம் நல்லது செய்தார்களோ, அவர்களுக்கு நன்றியில்லாமல் அவர் நடந்து கொண்டுள்ளார். இதனால் அவருடன் கூட்டணி அமைக்க, அரசியல் கட்சிகள் தவிர்த்து வருகின்றன.  பா.ஜனதாவுடன் தொகுதி பங்கீடு முடித்தவுடன் தகவல் தெரிவிப்போம். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும், நாங்களும்  இணைந்து பணியாற்றுகிறோம்.

சசிகலாவுடன் இணைந்து பணியாற்றுவது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும். நடிகர் ரஜினி மனிதாபிமானமிக்கவர். அவர் அழைப்பின்பேரில் சசிகலாவை சந்தித்துள்ளார். மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைவதற்கான வாய்ப்பே இல்லை. தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம். இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். எடப்பாடி அணி போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal