நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் இருந்து வருகிறது. ஜிகே வாசனுக்கு ராஜ்யசபா சீட்டை அதிமுகவிடம் இருந்து பெற்றுத் தந்ததும் பாஜகதான்.
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. இதனையடுத்து பாஜக அணியில் நீடிப்பதா? அதிமுக பக்கம் போவதா? என்கிற குழப்பத்தில் சிக்கினார் ஜிகே வாசன். ஒரு கட்டத்தில் டெல்லி பாஜக மேலிடத்தின் ஆலோசனையின்படி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பாஜக கூட்டணிக்கு திரும்ப வருமாறும் வாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனைத் தொடந்து தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தினார் ஜிகே வாசன். அதில், அதிமுக+ பாஜக கூட்டணி, பாஜக அணி, அதிமுக அணி என எந்த கூட்டணியில் தமாகா சேர வேண்டும் என வாக்கெடுப்பும் நடத்தினார் வாசன். தமாகா நிர்வாகிகள் பெரும்பாலானோர் அதிமுக பக்கமே போய்விடலாம் என வாக்களித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் திடீரென பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் நேற்று இரவு ஜிகே வாசனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பாஜக கூட்டணியில் ஜிகே வாசன் நீடித்தால் புதிய ஆட்சியில் மத்திய அமைச்சர் பதவி தரப்படும் என வாக்குறுதி தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து இன்று காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜிகே வாசன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தம்மை முதலில் சந்தித்து கூட்டணி குறித்து பேசினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் அங்கம் வகிக்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.