பாராளுமன்ற தேர்தலை பா.ஜனதாவுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் அணி சந்திக்கிறது. கூட்டணியில் 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது. பாராளுமன்ற தேர்தல் பணிகளை அ.தி.மு.க. தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் ஓ.பி.எஸ். அணி இதுவரையில் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. விருப்ப மனுக்களும் பெறப்படவில்லை. இந்த நிலையில் வருகிற 29-ந்தேதி ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எழும்பூரில் நடக்கும் கூட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. பா.ஜனதா கூட்டணியில் எத்தனை தொகுதியில் போட்டியிடுவது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, வேட்பாளர்களாக யார் யாரை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் எந்த தேதியில் இருந்து பெறுவது என முடிவு செய்யப்படுகிறது.
கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு தொகுதிகள் கேட்டு பெறவும் முடிவு செய்யப்படுகிறது. தனி சின்னத்தில் நிற்பதா? பா.ஜனதா சின்னத்தில் நிற்பதா? அவற்றின் சாதக-பாதகம் குறித்து பேசுகிறார்கள். பா.ஜனதா கூட்டணியில் புதிதாக இடம் பெறும் கட்சிகள் குறித்த முடிவு தாமதம் ஆவதால் தொகுதிகள் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் குறைந்தது 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.