பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தி.மு.க. கூட்டணியில் நேரடி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் ரகசியமாக பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மற்ற கட்சிகளை போன்று தே.மு.தி.க.வும் தயாராகி வருகிறது. வருகிற தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் தே.மு.தி.க.வின் குரலை ஒலிக்க செய்துவிட வேண்டும் என்பதில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா உறுதியோடு உள்ளார்.

அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அந்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து பிரேமலதாவும் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவதற்கே காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 14 எம்.பி. தொகுதி மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. தொகுதியை தரும் கட்சியுடனே கூட்டணி என்று பிரேமலதா கூறியிருந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் 5-ல் இருந்து 7 இடங்கள் வரையில் தருவதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக விரைவில் நேரடிப் பேச்சுவார்த்தையை நடத்தி போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்வதற்கு அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேருவதை தடுக்க பாரதிய ஜனதா கட்சி தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அ.தி.மு.க. தருவதைவிட கூடுதலாக இடங்களை தருவதாக தே.மு.தி.க.விடம் பாரதிய ஜனதா கட்சியினர் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

பாரதிய ஜனதா கூட்டணியில் 8 தொகுதிகள் வரையில் நாங்கள் உறுதியாக தருகிறோம். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்பை விட செல்வாக்கு பெற்றுள்ளது. எனவே கூட்டணியில் சேருவதற்கு தயக்கம் வேண்டாம் என்று பாரதிய ஜனதா கட்சி தே.மு.தி.க.வை கேட்டுக்கொண்டுள்ளளது. இதனால் தே.மு.தி.க. எந்த பக்கம் சாய்வது? என்பது பற்றி முடிவெடுக்க முடியாமல் தவித்து வருகிறது.




By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal