அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார். பின்னர் சென்னை புறப்படும் முன்பு மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க.வின் கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் மதுரையின் வளர்ச்சிக்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. மதுரை நெல்பேட்டையில் இருந்து அவனியாபுரம் வரை உயர்மட்ட பாலம் அமைக்க வெளியிடப்பட்ட அறிவிப்பு பின்னர் போதிய நிதி ஒதுக்காமல் வாபஸ் பெறப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.1,296 கோடி மதிப்பீட்டில் முல்லை-பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்பதால் தி.மு.க. அரசு தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறது. இதேபோல் விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். இது ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டமாகும். நாங்கள் கொண்டு வந்த திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
இதேபோல் வைகையாற்றின் கரையோரம் எங்களது ஆட்சியில் தான் காங்கிரீட் தடுப்பு சுவர் அமைத்தோம். வைகையாற்றின் குறுக்கே 2 தடுப்பணைகளையும் கட்டி திறந்தோம். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மதுரையில் நிறைவேற்றி இருக்கிறோம். மதுரை-நத்தம் பறக்கும் பாலம் திட்டமும் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது தான். இப்படி நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் புதிய பெயர் வைத்து தி.மு.க. பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகக்கு, அவர் அளித்த பதில்கள் வருமாறு:
அ.தி.மு.க. தலைமையில் இன்னும் கூட்டணி அமையவில்லையே? அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களையும், விலக்கியவர்களையும் ஒன்றாக இணைத்து கட்சியின் சின்னம் முடக்கப்படும் என்று கூறப்படுகிறதே? ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கைக்கு முதலில் ஆதரவு தெரிவித்தீர்கள். தற்போது எதிர்க்க காரணம் என்ன? மேகதாது அணை விவகாரம் பற்றி…?
‘தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே விரைவில் எங்கள் கூட்டணி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும். தி.மு.க.விலும் இன்னும் கூட்டணி உறுதி செய்யப்படாமலேயே இருக்கிறது. அங்கும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு தான் இருக்கிறது. கூட்டணி உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் அங்கு யார்? யார்? இருப்பார்கள் என்பது தெரியவரும். தற்போது தி.மு.க. கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் வெளியேறும். நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்.
எங்கள் தலைமையில் வலுவான கூட்டணி உருவாகும். இந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பிரமாண்ட வெற்றியை தரும். 2021 சட்டமன்ற தேர்தலில் 75 இடங்களில் நாங்கள் அமோக வெற்றி பெற்றோம். அதன் அடிப்படையில் பார்த்தால் தற்போது 7 தொகுதிகளில் எங்கள் வெற்றி உறுதியாக இருக்கிறது. நாமக்கல், கள்ளக்குறிச்சி, சிதம்பரம் உள்ளிட்ட தொகுதிகளில் சொற்ப வாக்குகளிலேயே வெற்றி வாய்ப்பை இழந்தோம்.
எங்களுக்கான அங்கீகாரத்தை சுப்ரீம் கோர்ட்டே உறுதி செய்துவிட்டது. தேர்தல் ஆணையமும் அ.தி.மு.க.வை அங்கீகரித்து இரட்டை இலை சின்னத்தையும் வழங்கியுள்ளது. எனவே இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. சின்னத்தை முடக்க நினைப்பவர்களுக்கு அது பகல் கனவாகவே உள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கை கோட்பாட்டில் சில திருத்தங்களை கொண்டு வரவே நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம். எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் பட்சத்தில் இந்த திட்டத்தை நாங்கள் ஆதரிப்போம். பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளரை முன்நிறுத்தி வாக்கு சேகரிக்க தேவையில்லை. ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மாநில கட்சிகளின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது.
மேகதாது அணை விவகாரத்தில் தி.மு.க. அரசு நிலையான கொள்கையை கடைபிடிக்கவில்லை. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது காவிரி நீரை பெற கடுமையாக போராடினோம். ஆனால் இந்த அரசு மேகதாது அணை விவகாரத்தில் கையாண்டு வரும் ஓட்டெடுப்பு முறை தவறானது. மேலும் அந்த பிரச்சனையில் இருந்து தி.மு.க. அரசு பின்வாங்கி விட்டது. மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசு கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும். எனவே தி.மு.க. அரசு மீண்டும் வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’. இவ்வாறு அவர் கூறினார்.