‘நெல்லை என்றாலே தொல்லை’ என்பார் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி. அந்தளவிற்கு ‘உள் பாலிடிக்ஸ்’ அரங்கேறும் நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு என்பதை பார்ப்போம்..!

நெல்லைத் தொகுதியைப் பொறுத்தளவில் தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் ரேஸில் இருப்பவர்கள் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா மற்றும் திருநெல்வேலி தி.மு.க. பிரமுகர் கிரகாம் பெல் ஆகியோர். இதில் கலைஞரின் தீவிர விசுவாசியான ஆலடி அருணாவின் மகளும் முன்னாள் அமைச்சருமான பூங்கோதைக்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

இது பற்றி தி.மு.க.வின் மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், திருநெல்வேலியைப் பொறுத்தளவிற்கு உட்கட்சிப் பூசல் அதிகளவில் இருப்பது உண்மைதான். இது தலைமைக்கே நன்றாகத் தெரியும். தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டதால், அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலில் வேலை பார்க்க வேண்டும் என தி.மு.க. தலைமை உத்தரவிட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் குட்புக்கில் இடம் பெற்றிருக்கும் முன்னாள் அமைச்சர் பூங்கோதைக்கு தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பிருக்கிறது. காரணம், அமைச்சராக இருந்தபோதும், எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் தொகுதிக்கு நிறைய செய்திருக்கிறார். கொரோனா பாதிப்பு, மழைவெள்ளத்தின் போதும் நிவாரணப் பொருட்களை வாரி வழங்கியிருக்கிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு உள்ளடி வேலைகளால் தோல்வியைத் தழுவினார். இவரைத் தோற்கடிக்க உள்கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்டவர் இன்றைக்கு சிறையில் இருக்கிறார். பூங்கோதை வெற்றி பெற்றிருந்தால் அமைச்சர் ஆகியிருப்பார் என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

தி.மு-.க. மருத்துவர் அணியில் மாநில பொறுப்பில் இருந்தபோது, மருத்துவ அணியில் மருத்துவத்துறை சார்ந்த செவிலியர்கள், மருந்தாளர்கள், பரிசோதனையாளர்கள் ஆகியோரை எல்லாம் இணைத்து மருத்துவர் அணியை மிக முக்கியத்துவம் வாய்ந்த அணியாக மாற்றிக் காட்டியவர் பூங்கோதை ஆலடி அருணா!

தி.மு.க.வைப் பொறுத்தவரை பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பூங்கோதை ஆலடி அருணா லண்டனில் மகப்பேறு மருத்துவம் படித்து முதுகலை பட்டம் பெற்றவர். சர்வதேச அளவில் அமெரிக்கா நடத்திய ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர். சரளமாக ஆங்கிலம் பேசக்கூடியவர்.

எனவே, இவர் நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாகி டெல்லி செல்லும் பட்சத்தில் தென்மாவட்ட மக்களின் உள்ளக்குமுறல்களை அப்படியே பிரதிபலிப்பார். மேலும், தி.மு.க. தலைமைக்கு தீவிரமான விசுவாசி என்பதால், பூங்கோதை போட்டியிட அதிக வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார்கள்.

பொறுத்திருந்து பார்ப்போம்… முதல்வரின் முடிவு என்ன என்பதை..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal