பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களிடம் கருத்துகளை கேட்டு அறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த குழுவினர் தஞ்சை மண்டலத்துக்கு உட்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் கருத்துக்களைக் கேட்டு அறிந்து தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- பா.ஜனதாவுடன் கூட்டணிக்காக அ.தி.மு.க.வுக்கு கதவுகள் திறந்தே இருப்பதாக மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளது அவரது நிலைப்பாடாகும். ஒரு காலத்தில் பா.ஜனதாவுடன், அ.தி.மு.க. தோழமையாக இருந்தது. இப்போது அரசியல் ரீதியாக நாங்கள் எதிர்க்கிறோம். எங்களோட முன்னோடிகள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பற்றி சிறுமைப்படுத்தும் விதமாக பா.ஜனதா மாநில தலைவர் கடுமையான அளவிற்கு விமர்சனம் செய்திருந்தார்.
தொடர்ந்து அ.தி.மு.க. தலைவர்களை சிறுமைப்படுத்தி பேசும் பா.ஜனதா மாநில தலைவரை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். தொண்டர்களும் சரி , பொதுமக்களும் சரி பா.ஜனதாவுடன் கூட்டணி வேண்டாம் என தொடர்ந்து கூறி வருகின்றனர். பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக தலைமை அறிவித்தபோது ஒட்டுமொத்த அ.தி.மு.க. தொண்டர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். எந்த காலத்திலும் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதற்கு தமிழ்நாடு முழுவதும் வரவேற்பு உள்ளது. எங்கள் நிலைப்பாட்டை பொறுத்தவரை பா.ஜனதாவுக்கான கதவு சாத்தப்பட்டு விட்டது. அவர்கள் திறந்து வைத்திருக்கலாம். அவர்கள் வரக்கூடாது என்று நாங்கள் கதவை சாத்தி விட்டோம். இதுதான் அ.தி.மு.க. நிலைப்பாடு. எப்போதும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.