பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலை கூட்டணி அமைத்து சந்திக்க முடிவு செய்துள்ளது. இதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சி ஏற்கனவே அடித்தளமும் அமைத்துள்ளது.
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரசாரமும் மேற் கொண்டார். இதன்மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது உறுதியானது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு இதுவரை யாரும் அழைக்காமலேயே உள்ளனர். இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த தி.மு.க. முன்னணி தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம் பெற்றுள்ளதா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். இது கமல் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி மக்கள் நீதி மய்யம் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது பற்றி வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று கூறியிருந்தார். இதன் மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் சேர்வதற்கான சூழல் ஏற்பட்டிருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். அதே நேரத்தில் வெளிநாட்டில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அடுத்த வாரமே சென்னை திரும்புகிறார். வருகிற 12 அல்லது 13-ந்தேதி அவர் சென்னை திரும்ப உள்ளார். அதன் பிறகு தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என கமல் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் நேரில் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளை கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் அந்த கட்சி நிர்வாகிகள் தீவிரமாக உள்ளனர். இது தொடர்பாக கமல்ஹாசன் பேச்சு நடத்தி உரிய முடிவை எடுப்பார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தென்சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணியில் குறிவைத்து மக்கள் நீதி மய்யம் கட்சி காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பம்பரமாக சுழன்று வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலகத்தை திறக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து தொகுதிகளிலும் அந்த கட்சியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியானதும் தேர்தல் பணிகளை மேலும் வேகப்படுத்தவும் கமல்ஹாசன் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.