செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிடலாமா? என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை கேட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தந்த விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் இருக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவை பிறகு வாபஸ்வாங்கினார். நீதிமன்றமும், ‘செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர்தான் நீக்க வேண்டும்’ என கருத்தும் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் குறித்து குடும்பத்தினரிடமும், தனக்கு நெருக்கமானவர்களிடமும் ஏற்கனவே முதல்வர் ஆலோசித்திருந்தாராம்.

இந்த நிலையில்தான், ‘என்னை மையப்படுத்தி தலைவருக்கு (ஸ்டாலின்) ஏற்படும் சங்கடங்கள் எனக்கு வருத்தமாக இருக்கிறது. என்னை பற்றி கவலைப்பட வேண்டாம்.. ஏற்கனவே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்திருக்கிறேன். அதை தலைவர் ஏற்க வேண்டும். தேவைப்பட்டால் கடிதம் கூட எழுதுகிறேன்’ என்று சிறைத்துறை அதிகாரிகள் மூலம் ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தியிருந்தாராம் செந்தில் பாலாஜி.

அந்தவகையில், ஸ்டாலினுக்கு தர்மசங்கடத்தை தருவதற்கு முன்னேயே, அமைச்சர் பதவியிலிருந்து செந்தில்பாலாஜி தன்னை தானே விடுவித்து கொள்வார் என்று தகவல்கள் பரபரத்தன. இப்போது, நீதிமன்றமே இதுகுறித்து கேள்வி எழுப்பிய துவங்கிவிட்டது. செந்தில்பாலாஜி மீதான வழக்கின் விசாரணையின்போது, 200 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவரை, அமைச்சராக வைத்திருப்பதன் மூலம், மக்களுக்கு என்ன சொல்லவருகிறது அரசு? என்று சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். நீதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பியது, ஸ்பெயினில் இருந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனை தொடர்புகொண்டு, இதுகுறித்து ஸ்டாலின் பேசியிருக்கிறார். அதேபோல, குற்றவியல் அரசு வழக்கறிஞர்களிடமும் விவாதித்துள்ளார் ஸ்டாலின்.

இது தொடர்பாக முதல்வருக்கு விளக்கம் கொடுத்த வழக்கறிஞர்கள், ‘பொதுவான கருத்தாக நீதிமன்றங்கள் அரசை பார்த்து இப்படி கேள்வி கேட்பது புதிதல்ல, அதைப்பற்றி சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆனாலும், சிறையில் இருப்பவரை அமைச்சராக வைத்திருக்க வேண்டிய அவசியம் எதற்கு? என்று பொதுவெளியில் விமர்சனங்கள் இருக்கிறது. இதை வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவும் அதிமுகவும் நம் ஆட்சியை நோக்கி விமர்சனம் வைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதற்கு முதல்வர், ‘எனக்கும் புரிகிறது. ஆனால், 7 மாதங்களாகியும் ஜாமீன் கிடைக்காத வருத்தத்தில் ரொம்பவும் நொந்து போயிருக்கிறார் செந்தில் பாலாஜி. இந்த நிலையில் கேபினெட்டில் இருந்து தூக்கினால் கட்சி நம்மை கைவிட்டுவிட்டது என அவர் மன உளைச்சல்களுக்கு ஆளாவார். அதான் பார்க்கிறேன்’என ஆதங்கப்பட்டு சொன்னாராம் ஸ்டாலின்.
இந்த விஷயம் செந்தில்பாலாஜிக்கு தெரியவர, ‘கேபினெட்டில் இருந்து என்னை எடுத்து விடுங்கள் என ஏற்கனவே முதல்வரிடம் சொல்லியிருக்கிறேன். அதை அவர் செய்ய வேண்டும்’ என்று மறுபடியும் தகவல் தந்துள்ளாராம் செந்தில்பாலாஜி.

செந்தில் பாலாஜி விஷயத்தில், திமுகவை முழுமையாக கண்டிக்கவும் முடியாமல், பாஜகவை ஆதரிக்கவும் முடியாமல் இருதலைக்கொள்ளியாய் அதிமுக உள்ளதாக தெரிகிறது. தவிர, செந்தில் பாலாஜியின் சகோதரர் இன்னும் தலைமறைவாகவே இருக்கிறார். இதுவும், தி.மு.க.விற்கு பெரிய தலைவலியாக இருக்கிறது. ஆளும் கட்சியாக இருந்துகொண்டு ஒருவரை கண்டுபிடிக்க முடியவில்லையா? அமலாக்கத்துறையும் என்ன செய்கிறது என கேள்வி எழுகிறது.

எனவே, விரைவில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜனாமா செய்வாரா? அல்லது தி.மு.க. தலைமை அமைச்சர் பதவியிலிருந்து அவரை விடுவிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal