நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். இவரைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் புதிய அரசியல் கட்சி அறிவிப்பை விரைவில் அறிவிக்க இருக்கிறார்.

சினிமா பிரபலங்கள் அரசியலில் குதிப்பது ஒன்றும் தமிழ்நாட்டுக்கு புதிதல்ல. எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா தொடங்கி சிவாஜி, கமல், விஜயகாந்த் என அந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அந்த வரிசையில் அண்மையில் இணைந்தவர் தான் தளபதி விஜய். அவர் தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி தான் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், 2026-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அறிவித்துள்ளார்.

விஜய் அரசியல் அறிவிப்பு குறித்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், தற்போது நடிகர் விஷாலும் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பும் இன்று வெளியாகிறதாம். அதுமட்டுமின்றி விஜய்யை போல் வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலில் விஷாலும் தனிக்கட்சியாக போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் அரசியலில் நுழைந்துள்ளதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்துள்ளதை போல் விஷாலும் அறிவிப்பாரா அல்லது சினிமாவில் நடித்துக்கொண்டே அரசியல் பணிகளை மேற்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். விஷால் நடிப்பில் தற்போது ரத்னம் திரைப்படம் உருவாகி உள்ளது. ஹரி இயக்கியுள்ள இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது.

ரத்னம் படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பை லண்டனில் நடத்த உள்ள விஷால், இப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார். தற்போது அரசியலில் நுழைய முடிவெடுத்துள்ளதால் துப்பறிவாளன் 2 படம் தொடங்கப்படுமா என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal